அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது நிகழ்ந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கினைக் குறித்து மேலும் விசாரிக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு மீதான விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் குஜராத் டி.ஜி.பி பி.சி பாண்டே உள்பட 4 உயர் போலீஸ் அதிகாரிகளை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. நோட்டீஸிற்கான பதிலை இம்மாதம் ஏழாம் தேதிக்குள் அளிக்கவேண்டும் என சிறப்பு நீதிபதி ஜோல்ஸனா யக்னிக் எஸ்.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
2002-ஆம் ஆண்டு நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பை வகித்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மா சேகரித்த தொலைபேசி உரையாடல் ஆவணங்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தவேண்டும் என்பது மனுதாரர்களின் கோரிக்கையாகும். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றகரமான சதித் திட்டத்தையும், கடுமையான கடமை தவறலை குறித்தும் விரிவாக விசாரித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவர வேண்டும். தொலைபேசி உரையாடல்களை விரிவாக ஆராய்ந்தால் நீதிமன்றத்திற்கு இது தெரியவரும்.
உயர் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டதும், சில குற்றவாளிகள் பா.ஜ.க தலைவர்களுடன் தொடர்பு கொண்டதும் கூட்டுப் படுகொலைகள் தீவிரமாக நடந்த 2002 பிப்ரவரி 28-ஆம் தேதி கட்டுப்பாட்டு அறை ஆவணங்களில் ஆதாரம் உள்ளன. முன்னால் டி.ஜி.பி பி.சி.பாண்டே, டி.சி.பி பி.பி.கோண்டியா, ஜெ.சி.பி.எம்.கெ.டண்டன், நரோடா போலீஸ் இன்ஸ்பெக்டர் கெ.கெ.மைசூர்வாலா ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment