Thursday, December 8, 2011

மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு

imagesCAM7ZRF1

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநீதியாக சிறையிலடைக்கப்பட்டு போலீஸின் கொடுமைக்கு ஆளான முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆந்திரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 70 இளைஞர்கள் நிரபராதிகள் என்பது நிரூபணமானதால் இழப்பீடு வழங்க முடிவுச் செய்ததாக ஆந்திரபிரதேச மாநில அரசு கூறியுள்ளது.

இழப்பீட்டு தொகையில் 20 பேருக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதமும், 50 பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும். தேசிய சிறுபான்மை கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் இத்தொகை வழங்கப்படுகிறது.

முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்திய போலீசாரின் சம்பளத்தில் இருந்து இத்தொகையை ஈடாக்கவேண்டும் என சிறுபான்மை கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.

2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ், ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி(ஹுஜி), லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(சிமி) ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள் என குற்றம் சாட்டியது.

வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட அனைத்து நிரபராதிகளிடமும் மன்னிப்புக் கோருவேன் என ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்துள்ளார். இவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என நேற்று முன்தினம் ஆந்திர சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் தலைவர்(எம்.ஐ.எம்) அக்பருத்தீன் உவைஸி வலியுறுத்தினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza