காபூல்:ஷியா முஸ்லிம்களை குறிவைத்து ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் ஷியா முஸ்லிம்களின் புண்ணிய ஸ்தலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேரும், வடக்கு நகரமான மஸாரே ஷெரீஃபில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேரும் மரணமடைந்தனர்.
இரு குண்டுவெடிப்புகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டுள்ளது. இத்தகவலை ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்பலா தினத்தில் ஒன்று கூடியவர்களில் பெரும்பாலோர் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். இரு குண்டுவெடிப்புகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது. காபூலில் ஷியா புண்ணிய ஸ்தலமான அபுல் ஃபாஸிலின் நுழைவு வாயிலுக்கு முன்பாக உடலில் குண்டை கட்டியிருந்த நபரும், மஸாரே ஷெரீஃபில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டும் வெடித்து சிதறின.
ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை குறித்து ஜெர்மனி தலைநகர் பெர்னில் நடந்த மாநாடு முடிவடைந்த உடனேயே இக்குண்டுவெடிப்புகள் நடந்தேறியுள்ளன. இமாம் ஹுஸைனின் இரத்த சாட்சி தினத்தை கர்பலா தினமாக ஷியாக்கள் கடைப்பிடிக்கின்றனர். அதேவேளையில் குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இக்குண்டுவெடிப்புகளுக்கு தாலிபான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஸபீஉல்லாஹ் முஜாஹித் மின்னஞ்சல் மூலமாக அளித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “எதிரிகளின் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைதான் இக்குண்டுவெடிப்பு” என அவர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புகளை ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கண்டித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த மத சடங்கு நடக்கும் வேளையில் நாட்டில் நடந்த கொடூரமான தாக்குதலாகும் என அவர் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment