ஜெய்ப்பூர்:ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்கான வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது. ஜிஸ்தியின் மனைவியும், பிள்ளைகளும் அஜ்மீருக்கு வருகை தந்துள்ளதை அடுத்து அவரது விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ஜிஸ்தியின் விடுதலை தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள கருணை மனு ராஜஸ்தான் செயல் ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீல் பரிசீலனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கு விசாரணை 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது குறித்தும், வழக்கில் ஜிஸ்தியின் பங்கினைக் குறித்தும் கூடுதல் விபரங்களை அளிக்க கோரி ஆளுநர் கருணை மனுவை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வருடம் ஜனவரி மாதம் ஜிஸ்திக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதயநோய், இடுப்பில் ஏற்பட்ட காயம், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் அவதியுற்று தற்பொழுது அஜ்மீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிஸ்தியை சந்திக்க அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு துவக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. ஜிஸ்தியின் மனைவி பேகம் கமருன்னிஷா, மகள் ஸோஹா ஜாவேத், சிறிய மகன் ஸய்யித் அலி காலிப் ஜிஸ்தி ஆகியோர் ஒரு மாத விசாவில் அஜ்மீருக்கு வருகை தந்துள்ளனர். மக்கள் சிவில் உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் ராஜஸ்தான் பிரிவு இவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்துள்ளது.
கன்னியாஸ்திரிகளான சிஸ்டர் மரியோலா, சிஸ்டர் காரல் ஆகியோரும் அஜ்மீரில் இவர்களுக்கு உதவியாக உள்ளனர். ஜிஸ்தியின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அஜ்மீரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். ஜிஸ்தியின் விடுதலைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பி.யு.சி.எல்லின் ராஜஸ்தான் பிரிவு பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். ஜிஸ்தியை அரசியல் சட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநர் இம்முறை விடுதலைச் செய்யவேண்டும் என அவர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment