Sunday, November 20, 2011

முன்னாள் அமைச்சர் மத்திய தொலைத் தொடர்புத் துறை சுக்ராமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை

sram_841197e
புதுடெல்லி:தொலைத்தொடர்பு ஊழல் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுக்ராமிற்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு ரூ.30 கோடி ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில்தான், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து திஹார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சுக்ராமை தாக்கிய ஹர்வீந்தர் சிங் என்பவரை போலீஸார் கைது செய்தனர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக சுக்ராம் (86) பணியாற்றினார். அப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு 3.5 லட்சம் கன்டக்டர் கி.மீ. கேபிள் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்க, 1996-ல் ஹரியாணா டெலிகாம் நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக 1998-ல் தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. 13 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் சுக்ராம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், அவருக்கு வழங்கப்படும் தண்டனையை நீதிபதி ஆர்.பி. பாண்டே சனிக்கிழமை அறிவித்தார். சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதிப்பதாகத் தீர்ப்புக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் சுக்ராமுடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஹரியாணா டெலிகாம் தலைவர் தேவிந்தர் சிங் செளத்ரி, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார்.

கோரிக்கை நிராகரிப்பு: தீர்ப்பு அளிப்பதற்கு முன்பு தண்டனை குறித்து வாதாடிய சுக்ராமின் வழக்குரைஞர், “86 வயதாகும் சுக்ராம், வயோதிகத்தால் உடல்நலக் குறைவுடன் இருக்கிறார். அவர், தனது மனைவியை இழந்து சிரமப்படுகிறார். எனவே, மிகவும் குறைந்த தண்டனையை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ. வழக்குரைஞர், “ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சுக்ராம் குற்றவாளியாக உள்ளார். அதில் தண்டனையும் பெற்றுள்ளார். அமைச்சர் பதவி வகித்த ஒருவர் தன் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். எனவே, அவருக்கு எவ்விதமான சலுகையும் காட்டக் கூடாது” என்றார்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.4.25 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுக்ராமுக்கு 2009-ல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கருவிகள் கொள்முதல் செய்தது தொடர்பான வழக்கில் அரசுக்கு ரூ. 1.66 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 2002-ல் சுக்ராமுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

7 முறை எம்.எல்.ஏ.வாகவும், 3 முறை எம்.பி.யாகவும் இருந்த சுக்ராம், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், 1997-ல் இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 1998-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பிரேம்குமார் துமல் தலைமையிலான மாநில அரசில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தொலைத் தொடர்பு முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ராசாவுடன்… கைது செய்யப்பட்டுள்ள சுக்ராம், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். “சிறை எண்-1ல் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுக்ராமுக்கு எவ்விதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படமாட்டாது”  என்று திஹார் சிறை அதிகாரி ஆர்.என். சர்மா தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza