அஹ்மதாபாத்:குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கின் விசாரணையை இடைக்கால தடை கோரி கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது. வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கக்கூடாது என்பது மட்டுமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எனவும், அதேவேளையில் விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிடவில்லை என நீதிபதி பி.ஜெ.தாந்தா மனுவை தள்ளுபடிச் செய்யும் போது தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காலம் தாழ்த்தாமல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதாக எஸ்.ஐ.டி அறிவித்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அறிக்கையை தாக்கல் செய்வோம் என எஸ்.ஐ.டி அளித்துள்ள உறுதியை புறக்கணித்து விசாரணைக்கு தடை விதிப்பது சரியல்ல என நீதிமன்றம் கூறியது.
உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்காக விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.எம்.வோரா வாதிட்டார். இக்கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும் எனவும், பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால் விசாரணை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நடைபெறலாம் என வோரா வாதிட்டார்.
இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் கண்டுபிடித்தவற்றை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவே எஸ்.ஐ.டி இதுவரை நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இடைக்கால தடைக்கோரிய மனு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்கு ஆகும் என எஸ்.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி முன்னாள் காங்கிரஸ் எம்.பியான இஹ்ஸான் ஜாஃப்ரி மற்றும் அவரது வீட்டில் அடைக்கலம் புகுந்த 69 நபர்களையும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக எரித்துக் கொலைச்செய்த வழக்குதான் குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை வழக்காகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment