கெய்ரோ:சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்க கோரி ராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் போராட்டம் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் தஹ்ரீல் சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவில் திரண்டுள்ளனர்.
புதிய சம்பவங்களை குறித்து ராணுவ தலைமை அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் பிரம்மாண்ட பேரணிக்கு எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நான்கு தினங்களிடையே 35 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான மோதல் நேற்றும் தஹ்ரீர் சதுக்கம், கெய்ரோவின் அண்மைப் பிரதேசங்களில் தீவிரமடைந்தது. இதனால் நிலைமை மோசமடைந்துள்ளதாக பி.பி.சி கூறுகிறது.
ஹுஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து மாற்றியதற்கு காரணமான மக்கள் கூட்டத்தை போன்றதொரு காட்சி தஹ்ரீர் சதுக்கத்தில் காணப்படுவதாக அல்ஜஸீரா கூறுகிறது.
ஜனநாயக் புரட்சியை வீழ்த்த நினைக்கும் ராணுவ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு நகரத்தின் மையப்பகுதிக்கு மக்கள் வருகை தந்துள்ளனர். மோதலை தொடர்ந்து இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தலை சீர்குலைக்க ராணுவம் முயல்வதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே எதிர்ப்பாளர்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்காத ராணுவ அரசுக்கு ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஹுஸ்னி முபாரக் அரசை விட மோசமான நடவடிக்கைகளை ராணுவ அரசு மேற்கொண்டுள்ளதாக ஆம்னஸ்டி குற்றம் சாட்டுகிறது. போராட்டம் நடத்துபவர்கள் மீது கண்ணீர் புகையும், கிரேனேடும் பிரயோகிப்பதை ராணுவம் நேற்றும் தொடர்ந்தது. இடைக்கால அரசு ராணுவ தலைமையிடம் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தது.
இதுத்தொடர்பாக எகிப்து ராணுவ அரசின் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஹுஸைன் தன்தாவி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார் என எகிப்தின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் நாட்டில் அதிகமான குழப்பங்களை உருவாக்க முயல்வதாக முன்னாள் அரபு லீக்கின் தலைவர் அம்ர் மூஸா கூறியுள்ளார். சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ராணுவ அரசு காலவரையறையை நிர்ணயிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment