Tuesday, November 22, 2011

போலி என்கவுண்டர் படுகொலை: மோடியின் ரத்த தாகத்திற்கு மேலும் ஒரு ஆதாரம்

Ishrat-fack-encounter
அஹ்மதாபாத்:மிகவும் சர்ச்சையை கிளப்பிய இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் சம்பவம் போலியானது என குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்ததை தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்களின் இரத்த தாகம் மீண்டும் ஒரு நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசத்தை பரப்பி தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ள நபர் என்ற இமேஜை உருவாக்கி தன் மீது பரிதாபத்தை உருவாக்க திட்டமிட்ட மோடியின் நரி தந்திரத்தின் ஒரு பகுதிதான் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம்.
2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடியை கொலைச்செய்ய வந்த லஷ்கர்-இ-தய்யிபா தீவிரவாதிகள் என குற்றம் சாட்டி அஹ்மதாபாத்திற்கு அருகே கோத்தார்பூரில் வைத்து நான்குபேரை குஜராத் போலீஸ் சுட்டுக் கொன்றது. மும்பையை சார்ந்த கல்லூரி மாணவியான 19 வயது இஷ்ரத் ஜஹான் ஷமீம் ராஸா, கேரளாவை சார்ந்த பிராணேஷ் குமார் என்ற ஜாவேத் ஷேக், பாக்.குடிமகன்கள் என கருதப்படும் அம்ஜத் அலி ராணா, ஸீஷார் ஜோஹர் அப்துல் கனி ஆகியோர் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்ட அப்பாவிகள் ஆவர்.
மும்பையிலிருந்து தீவிரவாதிகளின் குழு ஒன்று நீல நிற இண்டிகா காரில் காந்திநகருக்கு வருவதாக மத்திய ரகசிய புலனாய்வு துறையின் தகவலின் அடிப்படையில் நடத்திய ஆபரேசன் என்கவுண்டரில் முடிவடைந்ததாக குஜராத்தின் மோடி போலீஸ் கூறிய காரணமாகும். ஆனால், மத்திய ரகசிய புலனாய்வு துறை இத்தகையதொரு தகவலை குஜராத் போலீசுக்கு அளிக்கவில்லை என்பது பின்னர் நிரூபணமானது.
அன்றைக்கே இச்சம்பவம் போலி என்கவுண்டர் என குற்றச்சாட்டு எழுந்தபோதிலும் தேசிய பத்திரிகைகளின் துணையுடன் மோடி அரசும், போலீசும் சேர்ந்து அதனை எதிர்த்தனர்.
சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுஸர் பீ ஆகியோரை தீவிரவாதிகள் என குற்றம் சாட்டி போலி என்கவுண்டரில் கொலைச் செய்து தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ‘என்கவுண்டர் நிபுணர்’ டி.ஜி.வன்சாரா என்ற மோடியின் உறவினரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்த போலி என்கவுண்டரிலும் வில்லன்கள் என்பது பின்னர் நிரூபணமானது.
முதலில் இவ்வழக்கை விசாரித்த க்ரைம் ப்ராஞ்ச் குழு போலீஸ் அதிகாரிகளை குற்றமற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இதற்கு எதிராக இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமாவும், ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளையும் உயர்நீதிமன்றத்தை அணுகி சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
இதற்கிடையே 2009-ஆம் ஆண்டு இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய அஹ்மதாபாத் மெட்ரோ பாலிடன் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங் இந்த என்கவுண்டர் போலியானது என அறிக்கை சமர்ப்பித்தார். என்கவுண்டரை குறித்த போலீஸின் கூற்று முற்றிலும் போலியானதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும் என அவர் கண்டறிந்தார்.

போஸ்ட்மார்ட்டம் அறிக்கையையும், இதர ஆதாரங்களையும் பரிசோதித்ததில் போலீஸ் என்கவுண்டர் நடந்ததாக கூறும் நேரத்திற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே இஷ்ரத்தும் இதர மூன்று பேரும் கொலைச் செய்யப்பட்டதாக நிரூபணமானது.

ஆனால், குஜராத் அரசின் கோரிக்கையின் அடிப்படையில் தமாங்கின் அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு எதிராக ஷமீமாவும், கோபிநாத் பிள்ளையும் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சை அணுகுமாறு கூறியது. இதனிடையே, குஜராத் இனப் படுகொலைகளை விசாரணைச் செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இவ்வழக்கையும் விசாரிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அது அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. இதற்கு எதிராக குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை அணுகிய பொழுது அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

இவ்வழக்கை குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு நீதிபதி தமாங்கின் அறிக்கையை உறுதிச்செய்து கடந்த ஜனவரி மாதம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அம்ஜத் அலி, ஸீஷான் ஜோஹர் ராணா ஆகியோர் ஏற்கனவே போலீஸ் கஸ்டடியில் இருந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு கண்டிபிடித்தது. அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் இருவரும் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

போலி என்கவுண்டர் சம்பவம் நடக்கும் முன்பே இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் ஆகியோரை கடத்திச் சென்று அஹ்மதாபாத்-காந்திநகர் ஹைவேயில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் திட்டமிட்டுள்ளதாக போலியான மத்திய ரகசிய புலனாய்வு துறையின் தகவலை பரப்பினர். இதனைத் தொடர்ந்து இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இஷ்ரத்தை இந்த கொடூர கும்பல் பாலியல் வன்புணர்வுச் செய்த பிறகு கொலைச் செய்துள்ளது.

ராணாவையும், ஜோஹாரையும் பலவந்தப்படுத்தி இழுத்து வந்து இஷ்ரத் மற்றும் ஜாவேத் ஷேக் ஆகியோரின் இறந்த உடல்களுடன் ஒரு காரில் அமரச் செய்துள்ளனர். பின்னர் காரின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி ராணாவையும், ஜோஹாரையும் கொலைச் செய்தபிறகு அதனை என்கவுண்டர் என நம்பவைத்தனர்.

மும்பை தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்ட எஃப்.பி.ஐ ஏஜண்ட் டேவிட் கோல்மான் ஹெட்லி, இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தய்யிபா போராளி என கூறியதாக ஊடகங்கள் செய்தியை பரப்பின. ஆனால், எஸ்.ஐ.டியின் விசாரணையில் அச்செய்தியும் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

குஜராத் மோடி அரசின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்களை தாண்டி ஆர்.ஆர்.வர்மாவின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எஸ்.ஐ.டி அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அநியாயமாக கொலைச் செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பத்தினர் நடத்திய நீண்டகால சட்டரீதியான போராட்டத்திற்கான வெற்றி என கருதுவோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza