அஹ்மதாபாத்:கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குல்பர்க் சொசைட்டியை சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை சாட்சியாக சேர்க்க வேண்டும் என்றும் மேலும் நான்கு காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் கடந்த திங்கள் அன்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜெ.தந்தா வருகின்ற அக்டோபர் 18-ஆம் தேதி அம்மனுவின் மீதான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னால் காங்கிரஸ் எம்.பி.இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி அளித்துள்ள மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் சஞ்சீவ் பட்டை இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சிறப்பு நீதி மன்றத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேப் போன்று குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களால் குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 319 இன் கீழ் கலவரம் நடந்த சமயம் கலவரக்காரர்களை தடுக்காமலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் கடமையிலிருந்து தவறியதற்காக காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே, இணை ஆணையர் எம்.கே.தந்தோன், துணை ஆணையர் பி.பி.கோந்தியா மற்றும் முதல் ஆய்வு அதிகாரி கூடுதல் ஆணையர் சுதசமா ஆகியோரையும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க கோரி மனு அளிக்கப்பட்டு இருந்தது.
அவ்வாறு அளிக்கப்பட மனுவை கடந்த இருமுறை குஜராத் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் அதிகாரிகள் கடமை தவறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தது. மேலும் கடமை தவறியதாக கூறி ஆய்வாளர் ஏறத்தா என்பவரை மட்டும் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment