மும்பை:”ஜன லோக்பாலை ஆதரிக்காத எம்.பி.க்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க கூடாது. அவர்களின் வீடுகளை மக்கள் முற்றுகையிட வேண்டும்” என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி உள்ளார்.
ஜன லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்தார். தற்போது, மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் அன்னா தங்கியுள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள பலன், அடுத்தக் கட்ட நடவடிக்கை ஆகியவை பற்றி ஆலோசிக்க, சிவில் சொசைட்டி குழுவின் 2 நாள் கூட்டம் ராலேகான் சித்தியில் அன்னா தலைமையில் நேற்று தொடங்கியது.
சிவில் சொசைட்டியின் முக்கிய நிர்வாகிகளான கிரண்பேடி, சந்தோஷ் ஹெக்டே, அரவிந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், மணீஷ் சிசோடி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கும் முன்பாக அன்னா அளித்த பேட்டியில், “ஜன்லோக்பால் மசோதாவுக்காக நடத்தப்பட்ட இயக்கத்தில் எம்.பி.க்கள் என்ன பங்காற்றினார்கள் என்பதை மக்கள் கேட்க வேண்டும்.
எதிர்காலத்தில் எம்.பி.க்களை தேர்வு செய்யும்போது மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஜன்லோக்பால் மசோதாவை எதிர்த்தவர்கள் அல்லது அதன் மீது அக்கறை காட்டாமல் இருந்தவர்களுக்கு மீண்டும் எம்.பி.யாக வாய்ப்பு அளிக்கக் கூடாது. அவர்களின் வீடுகளை முற்றுகையிட வேண்டும் இந்தியாவில் இருந்து ஊழலை விரட்டும் வரை போராட்டம் தொடரும்” என்று கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment