திரிபோலி:திரிபோலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது அமெரிக்காவுக்கும், லிபியா இடைக்கால அரசுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
திரிபோலி மீது நேட்டோ விமானப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் சேதம் அடைந்த கட்டடங்களுள் லிபியா உளவுத் துறை அலுவலகமும் ஒன்று. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களைக் கைப்பற்றி அவற்றில் உள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது.
அவற்றின் படி கடாபியின் ஆட்சியில் லிபியா உளவுத் துறை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பிரிட்டனின் எம் 16 உள்ளிட்ட பல நாடுகளின் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்தது. ஆனால் கடாபி தான் மேற்குலகிற்கு முழு எதிரியாக தன்னைச் சித்திரித்துக் கொண்டார்.
லிபியாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் அமெரிக்காவிடம் இருந்தனர். அவர்களை மீண்டும் லிபியாவுக்குக் கொண்டு வந்து விசாரிப்பது குறித்து சி.ஐ.ஏ லிபியா உளவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டது.
கடந்த 2004ல் இதற்காக ஒரு நிரந்தர அலுவலகத்தை திரிபோலியில் திறப்பது குறித்து சி.ஐ.ஏ ஆலோசித்தது. கடாபி எதிர்ப்பு ராணுவத்தின் தளபதி அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ் ஒரு காலத்தில் அல்கொய்தாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட “லிபியா இஸ்லாமிய போராட்டக் குழு” வில் இருந்தவர்.
அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சி.ஐ.ஏ.வால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பின், லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் திருப்பி அனுப்ப 2004 மார்ச்சில் சி.ஐ.ஏ.வுக்கும், லிபியா உளவுத் துறைக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.
அதே போல் பிரிட்டனின் எம் 16க்கும், அப்போதைய லிபியா உளவுத் துறைத் தலைவர் மூசா குசாவுக்கும் இடையிலும் தகவல் தொடர்பு நடந்துள்ளது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும், சி.ஐ.ஏ.வும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன.
0 கருத்துரைகள்:
Post a Comment