ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து ஆர்.கே.பச்செளரி தலைமையிலான மத்திய அரசுக் குழுவினர் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச அரசுக் குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான பச்செளரி மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வை நடத்தினர்.
சேது சமுத்திரத் திட்டத்தால் ஆதாம் பாலம்-ராமர் பாலம் சேதப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து பச்செளரி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்து. இந்தக் குழிவினர் நேற்று ரகசியமாக ராமேஸ்வரம் வந்தனர்.
தனுஷ்கோடி சென்ற அவர்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் 3ம் எண் தீடைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நான்காம் தீடை, ஆதாம் பாலம், கோதண்டராமர் கோவில் பகுதிகளையும் அவர்கள் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
பின்னர் மண்டபத்தில் கடலோரப் பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தனுஷ்கோடி வழியாக இத் திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப் பாதையை பச்செளரி குழு ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. தனுஷ்கோடி அருகே தரைப்பகுதியைத் தோண்டி மன்னார் வளைகுடாவுக்கும், பாக் ஜலசந்திக்கும் இடையே கப்பல்கள் செல்லும் அளவுக்கு கடலை ஆளப்படுத்தலாம் என்று இந்தக் குழு கருதுவதாகத் தெரிகிறது.
இது குறித்த அறிக்கையை விரைவில் அவர்கள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment