டெல்லி:முதல்வர் ஜெயலலிதா மீது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியே தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதலில் சென்னை நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை பின்னர் பெங்களூர் தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பது நியதி. எனவே ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை.
கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள இந்த மனு, பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை மேலும் சில மாதங்கள் தாமதப்படுத்தும் செயலாகவே தெரிகிறது. இதைத் தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதனால் அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும், அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது. அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதை வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாதால் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment