திரிப்போலி:லிபியாவின் தலைநகரான திரிப்போலியின் ஆதிக்கம் மேலைநாட்டுப் படைகளின் உதவியுடன் எதிர்ப்பாளர்களின் கைகளில் முழுமையாகப் போயுள்ளது என்ற செய்திக்கிடையில் இன்னொரு செய்தியும் மீடியா உலகில் உலா வருகின்றது.
அதாவது முஅம்மர் கத்தாபியின் பிள்ளைகளுக்குள் வெளிப்படையாக கருத்துவேறுபாடுகள் இருப்பதுபோல் வரும் செய்திதான் அது. தங்கள் குடும்பத்தில் ஒரு ஆள் கூட எதிர்ப்பாளர்களிடம் சரணடைய மாட்டார்கள் என்றும், எதிர்ப்பாளர்களின் படைக்கெதிராக மரணம் வரை போராடுவோம் என்றும், வெற்றி கையெட்டும் தூரத்திலேயே உள்ளது என்றும் கத்தாபியின் இரண்டாவது மகன் ஸைஃபுல் இஸ்லாம் கூறுகிறார். தாங்கள் லிபியாவில்தான் இருப்பதாக லிபிய மக்களுக்குத் தெளிவுபடுத்த தான் ஆசைப்படுவதாகக் கூறும் அவர், திரிப்போலிக்கு அருகில் ஓர் இடத்தில் மறைந்திருப்பதாக அவர் வெளியிட்ட ஒலிநாடாவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கத்தாபியின் இன்னொரு மகன் ஸாத் சரணடைவதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்ப்பாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தனக்கு ஆட்சேபணையில்லை என்றும், நாட்டில் அதிகம் ரத்தம் சிந்தப்படக்கூடாது என்று தான் விரும்புவதாகவும் அரபுத் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் ஸாத் கூறியுள்ளார்.
ஸாத் சரணடைவாரானால் அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார் என்று தற்காலிக அதிகாரக் குழு (என்.டி.சி.) கூறியுள்ளது. ஸாத் சரணடையப் போகிறார் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்ததன் பின்னணியில்தான் கத்தாபி குடும்பத்திலுள்ள ஒரு ஆள் கூட எதிர்ப்பாளர்களிடம் சரணடைய மாட்டார்கள் என்று ஸைஃபுல் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளார்.
கத்தாபியின் ஆட்சியின் பொழுது கத்தாபிக்கு அடுத்த ஆளாகக் கருதப்பட்டவர் ஸைஃபுல் இஸ்லாம். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்பவராக இருந்த ஸைஃபுல் இஸ்லாம், மக்களிடம் வசீகரத் தன்மையைப் பெற்றிருந்தார். உன்னதக் கல்விகளையும் கற்றிருந்தார்.
கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியில் தோன்றிய கத்தாபி மேற்கத்திய படைகளுக்கும், அவற்றின் கூட்டாளிகளுக்கும் எதிராக கடுமையான எதிர்ப்புகளைக் காட்டவேண்டும் என்று தன் ஆதரவாளர்களிடம் முழங்கினார்.
கத்தாபியின் ஆதரவு தொலைக்காட்சியான அல் ராஇ சானல்தான் கத்தாபியின் பேட்டிகளை வெளியிடுகின்றது. “எதிரிகள் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். நாங்கள் பெண்கள் அல்ல, ஆண்கள் என்பதால் சரணடைவதற்கு வாய்ப்பே இல்லை. யுத்தம் தொடரும்” என்று அவர் அத்தொலைக்காட்சியில் பிரகடனப்படுத்தியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment