Sunday, September 11, 2011

ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி

கல்வி என்பது மனிதனை உயர்ந்த இடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு பொக்கிசமாகும். கல்வியை பற்றி ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இஸ்லாமிய மார்க்க கல்வி அறிவானது மறுமையின் வெற்றி இலக்கை அடையக் கூடிய ஒரு பாலமாக இருக்கின்றது. கல்வியின் உண்ணதங்களை உணரும் விதமாக புதுவலசையில் 9.9.2011 வெள்ளிகிழமை அன்று அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளியின் ஜும்ஆ பயானில் சகோதரர் இஸ்மாயீல் ஆலிம் அவர்கள் இஸ்லாமிய அறிவுப் புரட்சி என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

2007 ஆம் ஆண்டு ஐ.நா கல்வி குழு ஆய்வு ஒன்று நடத்தியது. அந்த ஆய்வின் அடிப்படையை கொண்டு 2007 ஆம் ஆண்டை ரூமி கல்வி ஆண்டு என ஐ.நா அறிவித்தது. மௌலானா ரூமி என்ற இஸ்லாமிய அறிஞர் 26000 கவிகளை கொண்ட பார்ஸி மொழியிலான மஸ்னவி என்ற காவியத்தைப் படைத்தார். மஸ்னவி என்ற அந்நூலைத்தான் ஐ.நா ஆய்வு செய்தது.

உலகில் எத்தனை அறிஞர்கள் எத்தனை நூல்களை படைத்துள்ளனர்? அவற்றுள் ஒரு இஸ்லாமிய அறிஞரின் நூலை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்ததன் விழைவாக 2007 ஆம் ஆண்டு ரூமி ஆண்டு என அறிவிக்கப்பட்டது. இச்சான்று மூலம் நாம் இஸ்லாமிய அறிவுப் புரட்ச்சியின் வளர்ச்சியை அறிய முடிகிறது. மஸ்னவி என்ற நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 2 லட்சம் பிரதிகள் குறுகிய நேரத்தில் விற்கப்பட்டது. இஸ்லாத்தின் சிறப்பை போற்றும் விதமாக ஐ.நா ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட  இரு நூல்களும் இஸ்லாமிய அறிஞர்களின் நூல்களே.

இஸ்லாத்தின் அறிவுப் புரட்சி மிக மகத்தானது. குர் ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் நமக்கு வழியுறுத்திக் காட்டுகிறது. உதாரணமாக ஒரு 50 ஆண்டு காலத்திற்கு முன்பாக சந்திர கிரகணம் என்றால் நாம் அனைவரும் விளங்கிக் கொள்வது என்ன? சந்திரனை பாம்பு விழுங்கப் போகிறது என்ற கட்டுக்கதையைத்தான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இதைப் பற்றி எடுத்துச்சொன்ன மார்க்கம் இஸ்லாம் மார்க்கம். அடிப்படை காலங்களில் இஸ்லாமிய அறிவுப் புரட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நூற்றாண்டில் மார்க்க கல்வி அறிவை கற்பவர்களை சில பேரைத் தான் காணமுடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதன் நோக்கம் மக்களிடையே அறிவுப் புரட்ச்சியை ஏற்படுத்துவதாகும். இதுவே நபி(ஸல்) அவர்களின் முதலும், முக்கியக் கடமையும் ஆகும். குர் ஆன் இறங்கிய 10 ஆண்டுக்குப் பிறகு தான் நபி(ஸல்)அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். மிஹ்ராஜ் பயணத்தின் போது தான் தொழுகை கடமையாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே கல்வி அறிவை போதித்து வந்தார்கள்.

6666 வசனங்களை கொண்ட திரு குர்ஆனின் முதல் வசனமே (இக்ரஹ்) படிப்பதை தான் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து கல்வி அறிவிற்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

அன்றய கால கட்டத்தில் கல்வி அறிவு இல்லாத மக்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை எவ்வாறு கடை பிடிதார்கள் என்று பார்த்தால் விசில் அடிப்பது, ஆடைகளை கழற்றுவது போன்ற கெட்ட செயல்களை தான் வணக்கமாக மேற்கொண்டார்கள். வணக்கங்கள் கடமையாகும் முன்பு 10 ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு கல்வி அறிவைத்தான் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு மனிதனுக்கு கல்வி அறிவும் , மார்க்க அறிவும் எவ்வளவு அவசியம் என்பதை இஸ்லாம் நமக்கு 5 கடமைகளின் மூலம் தெளிவு படுத்துகிறது.

1.தொழுகை - மாற்று மதத்தவர்கள் இறைவனை வணங்குவதற்கு மந்திரங்களை கற்க வேண்டிய அவசியம் இல்லை, பைபிளை கற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வழிபாட்டு தளங்களுக்கு சென்றால் அங்கே மந்திரம் தெரிந்த மத குருமார்கள் பிரார்த்தனை செய்து பிரார்த்தனை செய்த பொருளை கொடுத்தாலே போதும் அவர்களுடைய வணக்கம் நிறைவேறி விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் மார்க்கத்தை முழுமையாக கற்று அதன் படி நடந்தால் தான் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படும். கிப்லாவை முன்னோக்கி நின்று தொழுதால் மட்டுமே தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். சிறு கிராமத்தில் நின்று கொண்டு நாம் எவ்வாறு கிப்லாவை முன்னோக்கி நிற்பது என்றால் அதற்குத்தான் நாம் பூகோலத்தை கற்க வேண்டும் என்று இஸ்லாம் சுட்டி காட்டுகின்றது. கிப்லா மேற்கு திசையில் உள்ளது, திசைகள் பற்றி அறிய நாம் அனைவரும் பூகோலம் கற்றிருக்க வேண்டும்.

2.ஸகாத் - முஸ்லிம்கள் அனைவரும் தான் சம்பாதிக்கும் பொருளிலிருந்து 100 ல் 2 1/2 சதவீதம் ஸகாத் (தருமம்) கொடுக்க வேண்டும். 2 1/2 சதவீதம் என்பதனை நாம் எவ்வாறு கணக்கிடுவது என்பதின் மூலம் நாம் கணிதத்தை கற்றிருக்க வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு வழியுறுத்துகிறது.

நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களுடன் யுத்தத்திற்கு செல்லும் போது வழியில் ஒரு மூதாட்டி பேரீத்தம் பழங்களை பிரித்து கொண்டிருந்தார். உடனே நபி அவர்கள் சஹாபாக்களை நோக்கி ஒரு மரத்தில் எத்தனை மரக்கால் பேரீத்தம் பழங்கள் உள்ளன என்று கேட்டதற்கு சஹாபாக்கள் பார்வையை வைத்து எப்படி அளவிடுவது என்று கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் அதில் 5 மரக்கால் பழங்கள் இருக்கும் வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள் என்று கூறினார்கள்.

இதன் மூலம் நாம் அறிய வேண்டியது என்ன என்பதையும் நபி(ஸல்) அவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்."ஒரு பொருளை பார்த்த மாத்திரத்தில் அதன் அளவையும் தரத்தையும் அறிய வேண்டும்" என்பது தான். இன்னும் நபி(ஸல்) அவர்கள் "கணிக்கும் அறிவையும் கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

3.நோன்பு - நோன்பு கூறும் விசயமாவது ஆரோக்கியம் உடையவர்கள் நோன்பு நோற்கட்டும் , ஆரோக்கியம் இல்லாதவர்கள் நோன்பு நோற்பதற்கு விதிவிலக்குகள் பற்றி கூறுகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் மருத்துவ அறிவையும் பெற வேண்டும். இஸ்லாம் கல்வியறிவை கற்பதற்கு எவ்வாறு வழி வகுத்து தந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

4.ஹஜ் - ஹஜ் பயணம் அன்றைய காலத்தில் மிகவும் கடினமானதாக இருக்கும். உலகெங்கும் சுற்றி திரிந்து மக்காவிற்கு சென்றடைய வேண்டும். உலகெங்கும் உள்ள நாடுகளைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் இஸ்லாம் நமக்கு சுற்றுப் பயண கல்வியை கற்க வேண்டிய அவசியத்தை வழியுறுத்தி காட்டுகிறது.

5.கலிமா - இஸ்லாம் இப்பூமிக்கு வந்து 10 ஆண்டுகள் வரை லா இலாஹ இல்லல்லாஹ் கலிமாவை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நபி(ஸல்) அவர்கள் அரும்பாடுபட்டார்கள். கலிமாவை மக்களுக்கு புரிய வைத்து பின் அல்லாஹ்வை வணங்குவதை அறிவோடு விளக்கிச் சொன்ன மார்க்கம் இஸ்லாமிய மாக்கம்.

சாதாரணமாக ஒருவரிடம் சென்று அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக இருக்கும். அல்லாஹ்வை ஏன் எதற்காக வணங்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதிலை கல்வி அறிவின் மூலம் கற்றுக் கொடுக்க 10 ஆண்டு காலம் நபி(ஸல்) அவர்வகளுக்கு தேவைப்பட்டது. அல்லாஹ்வை வணங்குவதை ஒரு தெளிவான உதாரணம் மூலம் மக்களுக்கு புரிய வைத்தார்கள்.

அன்றய காலத்தில் பல கடவுள்களை மக்கள் வழிபட்டனர். ஒவ்வொரு கடவுளுக்கும் தனி தனி சக்தி உண்டென நம்பினார்கள். அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து செயல் படுத்த கூடிய ஆற்றல் கொண்டவனே அல்லாஹ் என்று மக்களுக்கு நபியவர்கள் புரியவைத்தார்கள்.

ஒரு கால்நடைக்கு பசிக்கு புல் கொடுத்தால் அது வயிற்றில் மூன்றாக பிரிகிறது. இரத்தம், பால், சாணம் ஆகும். இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று அருகில் தான் இருக்கின்றன. ஆனால் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று ஒத்து இருப்பதில்லை. இது அல்லாஹ்வால் மட்டுமே செய்ய முடியும் என்ற சிறப்பான உதாரணத்தை கூறி மக்களுக்கு புரிய வைத்தார்கள்.

இஸ்லாத்தின் இந்த 5 கடமைகளிலும் கல்வி அறிவு மனிதனுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை வழியுறுத்தி காட்டுகிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் மிக குறைவாகவே இருக்கின்றனர். தமிழ் நாட்டில் 200 மதரஸாக்கள் இருக்கின்றன. இஸ்லாமிய வரலாற்றில் கல்வி அறிவுப்புரட்சியே இஸ்லாம் வளர்வதற்கு அடித்தலமாக அமைந்தது. ஆனால் யாரும் அதை நாடிச் செல்வதில்லை. உலக கல்வியை நாடிச் செல்பவர்களே அதிகமானோர்.

இவ்வுலக கல்வியானது இவ்வுலகில் மட்டுமே சிறப்பை தரும். மார்க்க கல்வியோ இவ்வுலகிலும் மறு உலகிலும் மனிதனுக்கு வெற்றியை தரும். மார்க்க கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெற்றோர்களாகிய அனைத்து மக்களும் தங்கள் பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே மார்க்க கல்வி கற்க வழி வகுக்க வேண்டும். பெற்றோர்களின் உதவியோடு கிடைக்கும் மார்க்க கல்வி அறிவே சிறந்தது.

மறுமைக்கான வெற்றி இலக்கை அடைய முடியும். கல்வியை கற்க வயது வரம்பு இல்லை. தாயின் மடியில் இருந்து படுகுழிக்கு செல்லும் வரை இடை பட்ட காலங்களில் கல்வி அறிவை பெறலாம். கல்வி (மார்க்கம்+உலகம்) அறிவு ஒரு மனிதனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

இவ்வாறு பல ஆதாரங்களோடு நடைமுறை வாழ்க்கையின் சாத்திய கூறுகளையும், நிதர்சனமாக நடக்கும் நிகழ்வுகளையும் உதாரங்களாக்கி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இதனை செவிமடுத்த நாம் கல்வியில் நாம், நம் குடும்பம், நம் சுற்றுபுரம் எவ்வாறு இருக்கிறது என்பதனை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மூலம் நல்ல கல்வி அறிவுடைய சமூகம் உறுவாக ஒத்துழைப்போம். இன்ஷா அல்லாஹ்.

சகோதரி அனிஷா பைசல்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza