டெல்லி:2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க 2007-ல் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழு நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து தற்போதைய நிதி அமைச்சக குழுவின் மூத்த அதிகாரி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கடிதமானது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.
இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான (Economic Affairs) பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.
ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.
இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.
நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment