Sunday, August 21, 2011

தாக்குதல்களுக்கு ஓய்வில்லை: தூதரை திரும்ப அழைத்தது எகிப்து

காஸ்ஸா:சிறிய இடைவேளைக்கு பிறகு ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் அராஜக தாக்குதல் மூன்றாம் நாளான நேற்றும் தொடர்ந்தது. இரண்டு தினங்களிடையே 14 பேர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உள்பட மூன்றுபேரும், இரவு புரேஜி முகாம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர் என அல்ஜஸீரா கூறுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு போராளிகள் பதிலடி கொடுக்க துவங்கியுள்ளனர். மேற்கு இஸ்ரேலில் போராளிகள் ஏவிய மோர்ட்டார் தாக்குதலில் மூன்றுபேருக்கு காயமேற்பட்டது.

வியாழக்கிழமை ஃபலஸ்தீன் போராளிகள் பஸ் மீது நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேலிய ராணுவத்தினர் உள்பட எட்டுபேர் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை நடந்த தாக்குதலின் பின்னணியில் ஃபலஸ்தீன் மக்கள் எதிர்ப்பு குழு(பி.ஆர்.சி) என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸுடன் தொடர்பில்லாத அமைப்புதான் பி.ஆர்.சி.

இதற்கிடையே எல்லையை கடந்து சென்று ஐந்து பாதுகாப்பு படையினரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக எகிப்தில் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோர் கெய்ரோவில் எகிப்திய தூதரகத்தை நோக்கி பேரணி சென்றனர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் எகிப்து இஸ்ரேலின் தூதரை அமைச்சரவை திரும்ப அழைத்துள்ளது.

துப்பாக்கிசூடு நடத்துவதற்கான சூழலை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கெய்ரோவில் இஸ்ரேல் தூதருக்கு எகிப்து கடிதம் எழுதியுள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து இஸ்ரேல் வருத்தம் தெரிவிக்கவேண்டும் எனவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் எகிப்து பிரதமர் இஸ்ஸாம் ஷரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே எகிப்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார். கொலைத் தொடர்பாக ஒருங்கிணைந்த விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜெருசலத்தில் அவர் தெரிவித்தார்.

இப்புதிய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டவேண்டும் என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza