மொகாதிஷு:வறட்சியும்,பட்டினியும் பாடாய்படுத்தும் சோமாலியாவுக்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானும் குழுவினரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.
கடந்த 20 வருடங்களிடையே முதன் முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் கலவரபூமியான மொகாதிஷுவுக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உருதுகானுடன் அவருடைய மனைவியும், ஐந்து காபினட் அமைச்சர்களும் சென்றிருந்தனர். இக்குழுவினரை சோமாலியாவின் அதிபர் ஷேக் ஷெரீஃப் அஹ்மத் மொகாதிஷு விமானநிலையத்தில் வரவேற்றார்.
கலவரமும், பட்டினியும், வறட்சியும் கடுமையான நாசத்தை விளைவித்துள்ள மொகாதிஷுவுக்கு இதர நாட்டு ஆட்சியாளர்கள் செல்வதற்கு முடியாத இடமல்ல என்பதை நிரூபிப்பதுதான் இச்சுற்றுப்பயணத்தின் நோக்கம் என துருக்கியின் வெளியுறுவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வால் பட்டினியால் பாதிக்கப்பட்ட பகுதியாக சோமாலியாவை பிரகடனப்படுத்திய பிறகும் அந்நாட்டிற்கு கிடைக்கும் உதவிகள் போதுமானதல்ல எனவும், கூடுதலான உதவிகள் கிடைக்கச் செய்யவேண்டும் எனவும் உருதுகான் தெரிவித்தார்.
அதேவேளையில், சோமாலியாவிற்கு உதவ முன்வந்த நாடுகளையும், அமைப்புகளை அவர் பாராட்டினார்.
விமானநிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் கண்ட கூடாரத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு உருதுகானும், அவரது மனைவி அமீனாவும் உள்ளே நுழைந்தனர். அங்கே ஊட்டச்சத்து குறைவின் காரணமாக நான்கில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த பாஷிர்-ஃபாத்திமா தம்பதிகளுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கினர். மொகாதிஷுவில் சில அகதிகள் முகாம்களுக்கும் இக்குழுவினர் சென்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment