Wednesday, August 3, 2011

ரமழான் மாதமும் அதன் சிறப்பும்

ரமழான் மாதம் முஸ்லிம்களுக்கு பலத்தையும், தைரியத்தையும் கொடுத்து சத்தியத்தை உயிர்பிக்கும்  மாதம். இம்மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு அடங்கியிருக்கிறது. ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "உலகப் பொதுமறையான அல் குர்-ஆன் இம்மாதத்தில் தான் இறக்கப்பட்டது".

இது பகலில் பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு வைக்கும் மாதம். "உங்களில் யாரெல்லாம் ரமழான் மாதத்தை அடைகின்றீரோ அவர் நோன்பு நோற்கட்டும்" என்கிறது திருமறை.  "உங்கள் முன் இருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்கள் ஆகலாம்". (அல்குர்ஆன் 2 : 183)

ஏன் நோன்பு நோற்க வேண்டும்?அதிகாலை பொழுதிலிருந்து மாலை பொழுது வரை உண்ணாமலும் பருக்காமலும் ஏன் இருக்க வேண்டும்? என்ற கேள்வி  நம்
மில் பல நபர்களிடம் உண்டு. அதேவேளையில் அதற்கான பதிலையும் அவரவர் விருப்பதிற்கு தகுந்தவாறு ஊகித்து கொள்கின்றனர்.

மக்களில் சிலர் நோன்பு வைப்பதன் மூலம் ஏழைகளின் பசியை உணர முடியும் என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர் ஒரு தொடர்ச்சியாக வயிற்றுக்கு வேலை கொடுப்பதால் அதனுள் இருக்கும் உறுப்புகள் சீக்கிரம் பழுதாகிவிடும் அதற்காக வருடத்தில் ஒரு முறை நோன்பு வைப்பதன் மூலம் வயிற்றுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என பல விளக்கங்கள் கொடுக்கின்றனர்.

நோன்பு நோற்பதன் காரணம் இதுவல்ல மாறாக இறைவன் தன் திருமறையிலே குறிப்பிடுகின்றான்,"ஒட்டு மொத்த மனித சமுதாயமும் நல்லவர்களாகவும், இறையச்சமுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நோன்பை கடமையாக்கினேன்"என்று.(அல்குர்ஆன்)

"ல அல்லக்கும் தத்தக்கூன்"- இறையச்சம் உடையவர்களாக ஆக வேண்டும்

இஸ்லாத்தின் கடமைகளாகிய ஹஜ் மற்றும் தொழுகையின் நோக்கமும் மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காவே கடமையாக்கப்பட்டது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இறைவனின் பெயரை கொண்டு கொடுக்கப்படும் குர்பானியின் கறியோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை மாறாக குர்பானி கொடுக்கும் அம்மனிதனின் இறையச்சமே அல்லாஹ்வை சென்றடைகின்றது. எல்லா வணக்கத்தின் மூலமாகவும் மனிதன் இறையச்சமுடையவானாக ஆக வேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பின் மூலமாக ஒருவன் எப்படி இறையச்சமுடையவானாக மாற முடியும் என்பதை விளக்கி கூறினார்கள்,"எல்லா மனிதர்களும் இறையச்சமுடையவர்களாக பிறக்கின்றனர். ஆனால் சைத்தான் மனிதர்களின் இரத்த நாலங்களில் புகுந்து அவர்களின் இறை சிந்தனையையும் , இறையச்சத்தையும் அகற்றி விடுகின்றான். எனவே நீங்கள் பசித்திருப்பதின் மூலமாக சைத்தானுக்கு நெருக்கடி கொடுங்கள்" என்று கூறினார்கள்.

இறையச்சம் உடையவர்களாக நாம் இருக்கின்றோமா? என்பதை நாம் எப்படி அறிய வேண்டும்?

ஒருவன் தொழுதால், நோன்பு நோற்றால் மட்டும் அவன் இறையச்சமுடையவனாகிவிட முடியாது.

(எ.கா) ஒரு மனிதன், ஒரு ஆபாச படம் ஒன்றை பார்க்க ஆசை கொண்டு மற்றவர் பார்த்து விடுவாரோ என்ற பயத்தால் அதனை தவிர்கின்றான். இது இறையச்சம் ஆகாது. எந்த மனிதன் அப்படம் நம் தகுதிக்கு ஏற்ற படம் இல்லை. அல்லாஹ் நம்மையும் நம் செயல்களையும் நன்கு அறிகின்றான். நம்மை
 கண்காணித்து கொண்டிருப்பவன் அல்லாஹ் என்ற அச்சத்தால் அதிலிருந்து தன்னை தர்காத்து கொள்கிறானோ அவனே இறைச்சமுடையவனாவான்.

மனிதர்களில் சிலர் நோன்பு நோற்பதை தவிர்கின்றனர். ரமழான் மாததில் நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாய கடமையாகும். அல்லாஹ் தன் திருமறையில் "விசுவாசிகளே! உங்கள் முன் இருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். குறிப்பிட்ட நாட்களில் தான் நோன்பு கடமையாகும். எனினும் எவரேனும் உங்களில் பிரயாணியாகவோ,நோயாளியாகவோ இருந்தால் ரமழான் அல்லாத மற்ற நாட்களில் நோன்பை நோற்கட்டும். தவிர சக்தியுடையோர் ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும். அது அவருக்கு கடமையாகும்." என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 2 : 183,184)

நிச்சியமாக நோன்பு நோற்பதன் மூலம் பொறுமையைக் கடைப்பிடிக்க முடிகிறது. மேலும் அதில் உறுதியாக இருக்கவும் நோன்பு உதவுகிறது.

ரமழான் மாதத்தின் சிறப்பை பொறுத்தவரை இம்மாத்தில் தான் மனித இனத்தின் வழிகாட்டியான திருக்குர் அருளப்பட்டது.எனவே அல்லாஹ் இம்மாதத்தில் திருக்குர் ஆனை அருளியதற்கு நன்றி செலுத்துவதற்காக நாம் நோன்பு நோற்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் "ரமழான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படுகிறது.நரகத்தின் வாசல் மூடப்படுகிறது.சைத்தான் விலங்கிடப்படுகின்றான்" என்று கூறினார்கள்.

ரமழான் மாதத்தின் மற்ற சிறப்பு யாதெனில்

1. நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டது.
2. இம்மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த "லைலத்துல் கத்ரு" எனும் இரவு உள்ளது.

இப்புனித இரவில் இறைவனின் ஆணைப்படி "ஜிப்ரயீல்" மற்றும் அனைத்து வானவர்களும் பூமியில் இறங்குகின்றனர். இந்த லைலத்துல் கத்ரு இரவு ரமலான் மாதத்தில் 21,23,25,27,29 போன்ற ஏதாவதொரு கடைசி பத்தின் ஒற்றை இரவில் அமைகிறது. இவ்விரவில் முஸ்லிமாகிய அனைத்து மக்களும் இறைவனை தொழுதும், திருக்குர் ஆன் ஓதியும், திக்ரு செய்வதிலும் கழிக்கின்றார்கள்.

மேலும் ரமழான் மாததில் கடைசி 10 நாட்களில் "இஃதிகாஃப்" என்னும் இறைவணக்கத்தை ஆண்கள் மஸ்ஜிதிலும் , பெண்கள் தங்கள் வீட்டிலும் கடைபிடித்து வருகிறார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்,"ரமழான் மாதத்தில் நாம் அடைய கூடிய மிகப் பெரிய பலன் பாவ மன்னிப்பு பெறுவது தான்".

"ரமழான் மாதத்தில் பாவமன்னிப்பு பெறாதவன் நாசமாக போகட்டும் என்று வானவர் ஜிப்ரயீல் (அலை) கூற நான் ஆமின் கூறினேன்" என்று நபி(ஸல்) அவர்கல் கூறினார்கள்.

பெரியவர் முதல் சிறியவர் வரை தவறு செய்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். எவர் செய்த தவறை உணர்ந்து பின் அதற்காக பாவ மன்னிப்பு கேட்கின்றாரோ அவரே உண்மையான முஃமினாவார்.

பாவ மன்னிப்பு நம்மில் யாருக்குக் கிடைக்கும் என்னும் கேள்விக்கு 10 ஒழுக்கங்களை கடைபிடிப்போருக்கு 2 கூலி  கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான்.

1.பாவ மன்னிப்பு
2.மகத்தான கூலி

10 ஒழுக்கங்கள்:

1.முஃமின்களாக இருக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்று கொள்ள வேண்டும்.


2. இன்னல் முஸ்லிமீன வ முஸ்லிமாத்தி -  ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சலாம் கூறுவது , தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் சொல்வது , யர்ஹகுமுல்லாஹ் சொல்வது , ஜனாஸாவிற்கு செல்வது , விருந்துக்கு செவிமடுப்பது போன்றவைகளாகும்.

3. அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும். தொழுகையின் அழைப்பை ஏற்று வியாபாரி தன் வியாபாரத்தை விட்டு விட்டு தொழுகைக்கு செல்லட்டும் என்று அல்லாஹ் கூறூகின்றான்.

4. இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும். முட்டையில் வெள்ளை கரு குஞ்சாகவும் , மஞ்சள் கரு குஞ்சுக்கு உணவாகவும் உருவாகிறது. அல்லாஹ் நம்மை படைக்கும் முன் (ரிஜ்கை) இரணத்தை படைத்திருகின்றான். ரிஜ்க் அளிப்பவன் அல்லாஹ் என்ற நம்பிக்கை.

5. பொறுமையாக இருக்க வேண்டும் - "பொறுமையைக் கொண்டும்,தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்."

6. ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் இறையச்சமுடையவர்களாக இருக்க வேண்டும் - மூஸா(அலை) அவர்கள் காலத்தில் ஒரு கல் அழுது கொண்டிருந்ததை பார்த்து மூஸா(அலை) ஏன் அழுகின்றாய் என்று கேட்க அக்கல் "நரகத்தின் எரிபொருளாக கல் இருக்கும். அந்த கல்லாக நான் இருந்து விடுவேனோ என்று அழுகின்றேன்" என்று கூறியது. அந்த அளவிற்கு நரகத்தை பற்றிய அச்சம் இருந்தது.

7. உண்மையாளராக இருக்க வேண்டும் - காலை முதல் இரவு வரை நாம் பேசிய உண்மைகளை கணக்கிட்டு சொல்ல முடியும் ஆனால் பொய்களை கணக்கிடுவது கடினம். உண்மையை மட்டுமே பேசியதற்காக முதன் முதலில் தூக்கிலிடப்பட்டவர் ஹுபைப் எனும் நபித் தோழராவார்.

8. ரமழான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்.

9. உள்ளத்தை தீய செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

10. அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்ய்ய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள்,"மார்க்கத்தின் பாதி அறிவை அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் கற்று கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிகின்றார்கள், "ரமழான் மாதம் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவில் விழிக்க செய்து இறைவணக்கத்தில் ஈடுபட செய்வார்கள்".

இவ்வாறு ரமழான் மாதம் இறை வணக்கத்தினால் அல்லாஹ்வை நெருங்கும் மாதம் ஆகும். நாம் செய்யும் அமல்களுக்கு நன்மைகளை அல்லாஹ் வழங்குகின்றான். ஆனால் நோன்பிற்க்கு கூலியாக அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான்.

ஆகையால் அடுத்த ரமழான் நம்மை அடையுமோ அல்லது நாம் அடுத்த ரமழானை அடைவோமா என்பது நாம் அறிந்திருக்கவில்லை. கிடைத்த இந்த ரமழானில் அதிக நன்மைகளை சேகரித்து நோன்பாளிகள் பிரவேசிக்கும் ரய்யான் என்னும் சுவர்க்கத்தை அடையக்கூடிய நன்மக்களாக மாறுவோம் இன்ஷா அல்லாஹ்.


சகோதரி அனிஷா பைசல்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza