Wednesday, August 10, 2011

சிரியா அதிபருடன் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை

syria_jpg_1306269cl-8டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறையை கையாண்டுவரும் சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதுடன் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு சந்திப்பை நடத்தினார்.

வெளியுறவுத்துறை அமைச்சரின் சுற்றுப்பயணத்தில் ஆஸாதிற்கு கடுமையான எச்சரிக்கையை துருக்கி விடுக்கும் என நேற்று முன் தினம் துருக்கி அரசு அறிவித்திருந்தது.

சிரியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணும் துருக்கி, சிவிலியன்களை கூட்டுப்படுகொலை செய்வதைத் தொடர்ந்து ஆஸாதிற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது.


துருக்கி எல்லையையொட்டிய இத்லிப் மாகாணத்தின் நகரங்களில் சிரியா ராணுவம் தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதை குறித்து கவலையை தாவுதோக்லு ஆஸாதுடன் பகிர்ந்துகொண்டார். சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல் முஅல்லமுடன் தேவுதோக்லு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று இத்லிபில் இரண்டுபேர் கொல்லப்பட்டு, ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. பின்னீஸ், ஸிர்மீன் ஆகிய இடங்களுக்கு இருபத்தை ஐந்து ராணுவ டாங்குகள் எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்க வந்துள்ளன. ஏராளமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஹமாவில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் ஐந்து சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் இதில் உள்படும். இவர்களின் உடல்கள் ஜாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

டையர் ஸூரில் ராணுவம் குண்டுவீச்சை தொடர்கிறது. நேற்று 17 பேர் கொல்லப்பட்டனர். நகரத்தில் தனியார் மருத்துவமனைகள் பூட்டப்பட்டுள்ளதால் காயமடைந்தவர்களுக்கு சிகிட்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிரியாவின் அராஜக ராணுவ நடவடிக்கையை முடிவுக்கொண்டுவர கோரி இந்தியா, துருக்கி, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் தங்களின் பிரதிநிதிகளை சிரியாவிற்கு அனுப்பியுள்ளன.

மக்களின் ஜனநாயக ஆசைகளை கவனத்தில் கொள்ள சிரியா அரசு தயாராகவேண்டும் என இந்தியாவின் ஐ.நா தூதர் ஹர்தீப்சிங்பூரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza