புதுடெல்லி:இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியை கொலைச்செய்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் குற்றவாளி அல்ல என முன்னாள் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரலாற்று உண்மைகளை மறைத்து கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கையை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கண்டித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மகாத்மா காந்தியை கொலைச்செய்த ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு வெள்ளை வர்ணம் பூச கெ.டி தாமஸ் முயல்கிறார். காந்தியின் கொலையை துச்சமாக கருதும் விதமாக உயர் நீதிபீடத்தில் அமர்ந்திருந்த தாமஸை போன்றதொரு நபர் பேசுவது நீதியை மறுக்கும் செயலாகும். நாட்டின் எண்ணங்களுக்கு எதிராக இத்தகைய நபர் கருத்து தெரிவிக்க கூடாது.
மத சிறுபான்மையினரை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க மறுப்பவர்கள்தாம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். அத்தகைய அமைப்புகள் ஹிந்துத்துவா நாட்டை கொள்கையாக கொண்டு நடப்பவர்கள் ஆவர்.
நாட்டின் மதசார்பற்ற-ஜனநாயக பண்பை சீர்குலைக்க அவர்கள் முயல்கிறார்கள்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை உலக அமைதி தினமாக கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்ததை உலகம் வரவேற்றுள்ளது. இதற்கிடையில் தேசத்தந்தையின் கொலைக்கார கும்பலுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கெ.டி.தாமஸ் வெளியிட்டுள்ள அறிக்கை துரதிர்ஷ்டவசமானதாகும்.
வரலாற்று உண்மைகள் வளைத்து ஒடித்து ஓய்வு பெற்ற நீதிபதி கெ.டி.தாமஸ் வெளியிட்டுள்ள விமர்சனம் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment