Wednesday, August 24, 2011

கத்தாஃபியின் வீடு எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் – திரிபோலியை கைப்பற்ற போராட்டம் தொடர்கிறது

imagesCAXVFC3M
திரிபோலி:லிபியாவில் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் வீடு அமைந்திருக்கும் பாபுல் அஸீஸாவை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்தாஃபி ஆதரவு ராணுவத்துடன் நடந்த கடுமையான மோதலுக்கு பிறகு எதிர்ப்பாளர்கள் பாபுல் அஸீஸாவில் நுழைந்துள்ளனர். கத்தாஃபியின் வீட்டு வளாகத்திலிருந்த கத்தாஃபியின் சிலையை எதிர்ப்பாளர்கள் உடைத்ததாகவும், இங்கு எதிர்ப்பாளர்களின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

அதேவேளையில், கத்தாஃபி எங்கே இருக்கிறார் என்பதுக் குறித்த விபரம் வெளியாகவில்லை.

இதற்கிடையே எதிர்ப்பாளர்களின் அறிவிப்பிற்கு மாற்றமாக கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் தனது ஆதரவாளர்களிடையே தோன்றினார். திரிபோலியில் தனது ஆதரவாளர்களுடன் ஸைஃபுல் இஸ்லாம் நள்ளிரவில் தோன்றினார். ஸைஃபுல் இஸ்லாம் மற்றும் கத்தாஃபியின் இன்னொரு மகனான முஹம்மது ஆகியோரை கைதுச் செய்துள்ளதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் கூறியிருந்தார்.

ஸைஃபுல் இஸ்லாம் நகரத்தில் அமைந்துள்ள ரிக்ஸோஸ் ஹோட்டலுக்கு சென்று அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

திரிபோலி தற்பொழுதும் கத்தாஃபி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எதிர்ப்பாளர்களின் வாதங்கள் எல்லாம் தவறு என ஸைஃபுல் இஸ்லாம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். எதிர்ப்பாளர்களை சிக்கவைக்க தந்திரமாக திரிபோலியில் நுழைய அனுமதித்ததாகவும் இனி கடுமையான போராட்டம் நடக்கும் எனவும் ஸைஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

கத்தாஃபி தற்பொழுதும் திரிபோலியில் பாதுகாப்பாக உள்ளார் என ஸைஃப் கூறியுள்ளார். வெற்றிச் சின்னத்தை காண்பித்து முற்றிலும் தன்னம்பிக்கையுடன் ஸைஃப் பத்திரிகையாளர்களை சந்தித்தார் என பி.பி.சி கூறுகிறது. அதேவேளையில், எதிர்ப்பாளர்களால் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் முஹம்மதும் தப்பித்துவிட்டார் என அல்ஜஸீரா கூறுகிறது. இத்துடன் இருவரின் கைது தொடர்பாக எதிர்ப்பாளர்கள் கூறியவை பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza