ரியாத்:யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் மாளிகையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அப்துல் அஸீஸ் அப்துல் கனி மரணமடைந்துள்ளார்.
ரியாத் மருத்துவமனையில் அவர் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பழங்குடியின போராளிகள் நடத்திய தாக்குதலில் ஸாலிஹ் உள்பட பலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு பிரதமராகவும், வடக்கு யெமனின் துணை அதிபராகவும் பதவி வகித்திருந்த அப்துல் அஸீஸின் உடல் அடக்கம் இன்று ஸன்ஆவில் நடைபெறும்.
அதேவேளையில் தாக்குதல் தொடர்பாக நடக்கும் விசாரணை 80 சதவீதம் பூர்த்தியானதாகவும், கண்டுபிடிக்கப்பட்டவைகள் உடனடியாக வெளியிடப்படும் எனவும் தேசிய பாதுகாப்பு தலைவர் அலி முஹம்மது அல் அன்ஸி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களை வெளிச்சம்போட்டு காட்டுவதாக அமைந்திருக்கும் விசாரணை அறிக்கை என அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஹாஷித் பழங்குடியின தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஸன்ஆவில் ஸாலிஹின் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பழங்குடியின தலைவர்கள் களமிறங்கியதால் ராணுவம் அவர்களுக்கு எதிராக திரும்பியது. ஆனால், யெமனில் வலுவான செல்வாக்குடைய பழங்குடியின மக்கள் அரசு எதிர்ப்பு அணியில் சேர்ந்ததை தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் உள்நாட்டு போராக மாறியது.
காயமடைந்த் ஸாலிஹ் காயங்கள் குணமானவுடன் நாட்டிற்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment