ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீரில் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை அடக்கம் செய்ததாக மாநில மனித உரிமை கமிஷனின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மூன்று வருடங்களாக நடத்திய நீண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சியடையும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1990 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டவர்களின் உடல்கள்தாம் இவை. குண்டடிப்பட்ட காயங்களைக் கொண்ட இந்த உடல்களை மோதல்களில் கொல்லப்பட்ட அடையாளம் காணமுடியாத போராளிகளுடையது என்ற பெயரில் அடக்கம் செய்வதற்காக உள்ளூர்வாசிகளிடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டவை என மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இறந்த உடல்களில் சில கோரமாக்கப்பட்ட நிலையிலும், 20 உடல்கள் எரிந்த நிலையிலும், ஐந்து உடல்களில் மண்டை ஓடுகள் மட்டும் மீதமிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாராமுல்லாவில் 21 அடையாளப்படுத்தாத கல்லறைகளில் 851 உடல்களும், பந்திபூரில் மூன்று கல்லறைகளில் 14 உடல்களும் குப்வாராவில் 11 கல்லறைகளில் 1277 உடல்களும் ஹந்த்வாராவில் மூன்று கல்லறைகளில் 14 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 18 கல்லறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
அடையாளப்படுத்தாத கல்லறைகளில் அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்தபோதிலும் முதன்முறையாக அதிகாரப்பூர்வ விசாரணையின் மூலமாக சந்தேகத்திற்கிடமின்றி இவ்விவகாரம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையை கடந்த மாதம் மனித உரிமை கமிஷன் சமர்ப்பித்துள்ளது. இந்த இறந்த உடல்களின் முழுமையான விபரங்களை போலீஸ் சேகரிக்கவில்லை எனவும் கமிஷனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ விபரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு கஷ்மீரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடைய டி.என்.ஏ விபரங்களுடன் ஒப்பீடுச்செய்து பரிசோதிக்க வேண்டும் என கமிஷனின் அறிக்கை பரிந்துரைச் செய்கிறது.
இதுத்தொடர்பாக மாநிலம் முழுவதும் விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என அறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அடக்கம் செய்வதற்காக போலீசாரால் ஒப்படைக்கப்பட்ட அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களின் எண்ணிக்கையை போலீஸ் வசமுள்ள ஆவணங்களை ஆராய்ந்து புலனாய்வுக்குழு தயார் செய்துள்ளது. போலீஸ் வசமுள்ள ஆதாரங்கள், நேரில்கண்ட சாட்சிகள், கிராமத் தலைவர்கள், கல்லறைகளை தயார் செய்தவர்கள், கல்லறை மைதான காவலாளிகள் ஆகியோரின் வாக்குமூலங்களுடன் ஒப்பீடுச்செய்து விரிவான பரிசோதனைக்கு பிறகே இறந்த உடல்களின் எண்ணிக்கை உறுதிச் செய்யப்பட்டது.
ஆதாரங்கள் அளித்த 62 பேரின் விபரங்களும் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட இறந்த உடல்களை டி.என்.ஏ பரிசோதனை நடத்துவதற்கு வாய்ப்புகள் தற்போதும் இருப்பதாகவும், காலதாமதம் செய்யும் தோறும் இந்த வாய்ப்பு மங்கிவிடும் எனவும் புலனாய்வுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
கஷ்மீரில் காணாமல் போனவர்களின் பாதுகாவலர்களின் அமைப்பான எ.பி.டி.பி 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து மாநில மனித உரிமை கமிஷன் இதுத்தொடர்பான விசாரணையை துவக்கியது. இதுத்தொடர்பாக அன்றைய பி.டி.பி-காங்கிரஸ் அரசுக்கு கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
கஷ்மீரில் அமுலில் இருக்கும் கொடூரமான ராணுவ சட்டமான எ.எஃப்.எஸ்.பி.எ மற்றும் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பகுதி சட்டம் ஆகியவற்றின் துஷ்பிரயோகம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு போலீஸ் சூப்பிரண்ட் பஷீர் அஹ்மத் யாதுவின் தலைமையில் இப்புலனாய்வு விசாரணை நடைபெற்றுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment