Tuesday, August 23, 2011

ஆந்திரா:காங்.அரசுக்கு நெருக்கடி- 26 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

M_Id_230279_Andhra_MLAs
ஹைதராபாத்:ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன்ரெட்டிக்கு நெருக்கமான ஆந்திர சட்டசபையின் 26 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸை சார்ந்த 24 பேரும், தெலுங்குதேசம் கட்சியை சார்ந்த 2 பேரும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களாவர்.

குழுச் சண்டையால் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசுக்கு இச்சம்பவம் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான முயற்சியை கண்டித்து பதவியை ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பி.சுபாஷ் சந்திரபோஷ் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதம் சட்டசபை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலான எம்.எல்.ஏக்களின் ஆதரவை உறுதிச்செய்து கிரண்குமார் ரெட்டியின் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்கவும் ஜகனின் ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சிறப்பு தெலுங்கானா மாநிலம் உருவாக்க கோரி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். ஆனால், இம்மூன்றுபேரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. 294 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 183 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 155 இடங்கள் உள்ளன. மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(7 இடங்கள்), சுயேட்சைகள்(3 இடங்கள்) ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளன. பெரும்பான்மைக்கு 148 பேரின் ஆதரவு தேவை.

சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியின்(18 உறுப்பினர்கள்) ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது. பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸில் இணையாவிட்டால் தற்பொழுது காங்கிரஸுக்கு பெரும்பான்மையை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

நேற்று முன் தினம் ஜகன்மோகன் ரெட்டியின் வீடுகள் மற்றும் அவருக்கு உரிமையான நிறுவனங்களிலும் சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் ராஜசேகரரெட்டியின் பெயர் இடம்பெற்றிருந்தது ஜகனின் ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஜகனின் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ராஜினாமா முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஜகன் மீதான சி.பி.ஐ ரெய்டு அரசியல் தூண்டுதல் என கூட்டம் குற்றம் சாட்டியது.

ஆந்திரா மாநில உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் சி.பி.ஐ ஜகனின் சொத்துக்களைக் குறித்து விசாரணையை துவக்கியது. ராஜசேகரரெட்டி முதல்வராக பதவி வகிக்கும் வேளையில் அவருடைய மகனான ஜகன் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான சொத்துக்களை சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜகனின் நிறுவனங்களில் பணத்தை முதலீடுச்செய்த பலரும் ஆட்சியில் ஆதாயங்களை பெற்றவர்கள் என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலிடம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி ஜகன் தனது கட்சி உறுப்பினர் பதவியையும், எம்.பி பதவியையும் ராஜினாமா செய்து புதிய கட்சியை துவக்கியிருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza