லண்டன்:சர்ச்சையை கிளப்பிய தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பிரிட்டனில் மூத்த போலீஸ் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மெட்ரோபாலிடன் கமிஷனர் சர் பால் ஸ்டீஃபன்சன், துணைக்கமிஷனர் ஜான் யாட்டஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கிய நியூஸ் ஆஃப் த வேர்ல்டின் துணை எடிட்டர் நீல் வாலிஸை பொதுமக்கள் தொடர்பு துறையில் நியமித்தது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து பிரிட்டனின் மூத்த போலீஸ் அதிகாரியான பால் ஸ்டீஃபன்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்துள்ளது.
நியமனம் செய்யும்பொழுது வாலிஸின் ஆவணங்களை பரிசோதித்தது ஜான் யாட்டஸ் ஆவார். யாட்டஸின் ராஜினாமாவை மெட்ரோபாலிடன் போலீஸ் ஆணையம் சேர்மன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஊடக முதலை ரூபர்ட் மர்டோக்கின் கட்டுப்பாட்டில் உள்ள நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பரபரப்பான செய்திகளுக்காக பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது விவாதத்தை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பத்திரிகை இழுத்து மூடப்பட்டது. வாலிஸிற்கு கடந்தவாரம் வியாழக்கிழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. யாட்டஸுடன் நெருங்கி தொடர்பு வைத்திருப்பவர் வாலிஸ்.
இதற்கிடையே நேற்று முன்தினம் கைதான நியூஸ் இண்டர்நேசனல் தலைவர் ரபேக்கா ப்ரூக்ஸிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. பாராளுமன்ற குழு முன்பு அவர் இன்று ஆஜராவார். ரூபர் மர்டோக்கும் அவரது மகன் ஜேம்சும் இன்று ஆஜராவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விவாதிக்க நேற்று கூடிய பாராளுமன்றத்தின் பொது அவையின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் முன்னேற்றத்தை அறிந்தபிறகு நாளை மீண்டும் பாராளுமன்றம் கூடும் என பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment