அஹ்மதாபாத்:தங்களுடைய பாதுகாப்பையும், சட்டத்தை அமுல்படுத்துவதில் மோடியின் அரசு காண்பிக்கும் அலட்சியத்தையும் கவனத்தில்கொண்டு யூனியனை உருவாக்க குஜராத் மாநில தகவல் உரிமை ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தகவல் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் பரிதாபகரமான சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
52 சதவீத விண்ணப்பங்களையும் குஜராத்தின் தகவல் உரிமை ஆணைய கமிஷனர் நிராகரிக்கின்றார். குஜராத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்களை வெளிக்கொணர்ந்த தகவல் உரிமை ஆர்வலர்கள் மீது தாக்குதலும் நடத்தப்படுவதும், கொலைச் செய்யப்படுவதும் குஜராத்தில் நடைபெறுவதாக தகவல் உரிமை ஆர்வலர் பரத் சிங் ஸாலா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தகவல் உரிமை ஆர்வலர்களுக்கு குஜராத்தில் பாதுகாப்பு இல்லை. மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை. ஆகையால் அமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் அரசு தகவல் உரிமை ஆர்வலர்களை அடக்கி ஒடுக்க முயல்வதாக சமூக ஆர்வலரும், பிரபல நடன கலைஞருமான மல்லிகா சாராபாய் கூறினார். எனது மகன் என்னை நம்பி ஒப்படைத்த பணிக்காக கடைசிவரை போராடுவேன் என ஒருவருடம் முன்பு கொல்லப்பட்ட தகவல் உரிமை ஆர்வலர் அமீத் ஜெத்வாவின் தந்தை பிகு ஜெத்வா தெரிவித்துள்ளார்.
கீர் வன பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தை வெளியுலகிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து அமீத் ஜெத்வா கொல்லப்பட்டார். ஒரு முன்னாள் அமைச்சரின் ஒத்துழைப்புடன் சவுராஷ்ட்ரா பகுதியில் நடக்கும் சட்டவிரோத சுரங்க தொழிலுக்கு எதிராக புகார் அளித்ததை தொடர்ந்து நில மாஃபியாக்களால் தான் தாக்கப்பட்டதாக இன்னொரு தகவல் உரிமை ஆர்வலர் பாகுபாயி தேவானி குற்றம் சாட்டினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment