Tuesday, July 26, 2011

தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா? – பொய் என கூறுகிறது ஆய்வு

untitledபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச்சத்துக் குறைப்பாட்டை போக்கவும் எப்பொழுதும் பாட்டில் தண்ணீரும் கையுமாக திரிந்து சிறந்த ஆரோக்கிய வாழ்வை கனவு காண்பவர்கள் ஏராளம். ஆனால் அத்தகையோர் தங்களது நேரத்தை வீணாக்குகின்றார்கள் என கூறுகிறது ஒரு ஆய்வு.

தினமும் ஆறு அல்லது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் உபதேசம் இன்னொரு நிபுணத்துவ பொய் என புதிய ஆய்வு கூறுகிறது.

ஸ்காட்லாந்து மருத்துவ விஞ்ஞானி ஒருவர் இதுத் தொடர்பாக மெடிக்கல் ஜெர்னல் என்ற பத்திரிகையில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’தினமும் கூடுதலாக தண்ணீர் குடிப்பது மூலம் தனியாக ஏதேனும் ஆரோக்கிய பலன்கள் உண்டா? ஒருபோதும் இல்லை. பிரிட்டன் நேசனல் ஹெல்த் சர்வீஸ் வெளியிட்ட ஒரு கற்பனையே இது’-என டாக்டர்.மார்கரெட் மாஸ் கார்ட்னெ தனது கட்டுரையில் கூறுகிறார்.

தினமும் எட்டு டம்ளர் தண்ணீராவது அருந்தவேண்டும் என கூறியது கனடா நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகமாகும். கூடுதலாக தண்ணீர் அருந்துவது உடலிலுள்ள கழிவுகள் வெளியேற உதவும் ஆதலால் ஆண்கள் 9 டம்ளரும், பெண்கள் 13 டம்ளரும் நீர் அருந்தவேண்டும் என கனடா அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஏராளமான பள்ளிக்கூடங்களும், நிறுவனங்களும் மாணவர்களை பாட்டில் தண்ணீர் கொண்டுவர உபதேசிப்பதாகவும், பாட்டில் தண்ணீர் நிறுவனங்களுக்கும் இத்தகைய தவறான செய்திகளை பரப்புரைச் செய்வதில் பெரிய பங்கிருப்பதாகவும் டாக்டர்.கார்ட்னெ கூறியுள்ளார்.

ஆனால் சிறுநீரில் கற்கள் போன்ற நோயுடையவர்கள் கூடுதலாக தண்ணீர் குடிப்பது சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார். தினமும் தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைவதால் ஹிபோனாட்ரீமியா என்ற நோய்க்கு காரணமாவதாக ஆய்வாளர் கூறுகிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza