புதுடெல்லி:பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் என ஆ.ராசா டெல்லியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நீதிபதி ஷைனி முன்பாக அவர் இதனை தெரிவித்தார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கி ஆ.ராசா உள்பட 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றுவருகிறது.இவ்வழக்கில் சி.பி.ஐ ஆ.ராசா மீது மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று முன்தினம் வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.
இதையடுத்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் தொடங்கியது.ப்போது ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார். ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில்குமார் வாதிடுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை ராசா எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே ராசாவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே ராசாவும் தொடர்ந்து பின்பற்றினார். இதனால் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.
ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.
யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை டெலிநார் வாங்கியதும் சட்டப்படி தான்.
டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும்.
எனக்கு (ராசா) முன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி 26 லைசென்ஸ்களையும், தயாநிதி மாறன் 25 லைசென்ஸ்களையும் விற்றனர். அதி்ல், எதுவுமே ஏலம் விடப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கு முதலில் எந்த அடிப்படையில் தான் அவை விற்கப்பட்டன. அவர்கள் எந்தக் கொள்கையை பின்பற்றி அவற்றை விற்பனை செய்தனரோ அதே கொள்கையைப் பின்பற்றித் தான் நானும் 122 லைசென்ஸ்களை வழங்கினேன்.
அவர்கள் தவறு செய்யவில்லை என்றால், என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?. நான் மட்டும் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?. 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதை நான் பின்பற்றினேன்.. அவ்வளவு தான்.
முந்தைய பாஜக அரசு வகுத்த கொள்கையின் அடிப்படையில் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது என ஆ.ராசா தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment