மொகாதிஷு:கடந்த 60 ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்கும் சோமாலியாவிலிருந்து அந்நாட்டு மக்கள் உணவை தேடி கென்யாவின் தாபாப் முகாமிற்கு கூட்டாக புலன் பெயர்ந்து வருகின்றனர். உள்நாட்டு கலகமும், பட்டினியும் அந்நாட்டு மக்களை வாட்டி வருகிறது. பயணத்தின் போது ஏராளமானோர் மரணிப்பதாக அல்ஜஸீரா கூறுகிறது. எரித்ரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளும் கடும் வறட்சியை சந்தித்துவருகின்றன.
நான்கு லட்சம் மக்கள் தங்கியிருக்கும் தாதாப் முகாமின் நிலைமை பரிதாபகரமானது என ஐ.நா பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் மேலும் ஒரு முகாமை துவங்குமாறு கென்யாவுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக தாதாப் திகழ்கிறது. பட்டினியின் மூலம் உற்றார்களை இழந்தவர்களில் பெரும்பாலோர் இம்முகாமில் தங்கியுள்ளனர்.
சோமாலியாவின் பெரும்பாலான பகுதிகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்ஸபாப் போராளிகள் உலகநாடுகளின் உதவிகளை பெறுவோம் என அறிவித்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உதவி மொகாதிஷுவை சென்று அடைந்துள்ளது.
சோமாலியாவிற்கு மேலும் உதவிகளை அளிப்போம் என அவ்வமைப்பு அறிவித்துள்ளது. எத்தியோப்பியாவிற்கு நான்கு கோடி பவுண்டின் உதவியை அளிப்போம் என பிரிட்டன் அறிவித்துள்ளது. சோமாலியாவில் உதவிகளை அளிக்க தயார் என பிரிட்டனை சார்ந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

0 கருத்துரைகள்:
Post a Comment