Monday, July 4, 2011

லோக்பால்:அனைத்துக்கட்சி கூட்டத்திலும் கருத்தொற்றுமை இல்லை

lokpal_today
புதுடெல்லி:லோக்பால் மசோதாவின் பிரிவுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்திலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இடதுசாரி கட்சிகளும், தெலுங்கு தேசம் போன்ற சிறிய கட்சிகளும் பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என கோரிய முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க இவ்விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை.

முழுமையில்லாத மசோதாவில் நிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது என பா.ஜ.க தெரிவித்தது. அ.இ.அ.தி.மு.க இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, சிரோமணி அகாலிதளம், தி.மு.க போன்ற கட்சிகள் இதனை எதிர்த்தன.

நீதிபதிகளையும், பாராளுமன்ற எம்.பிக்களின் நடவடிக்கைகளை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவருதல், சி.பி.ஐ போன்ற ஏஜன்சிகளை லோக்பாலில் இணைத்தல், லோக்பாலை தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் சட்டம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தர்க்க விஷயங்களிலும் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. மசோதாவை பாராளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரில் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக மட்டும் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் முடிவடைந்தது.

இரண்டு மசோதாக்களை விவாதிக்க சமர்ப்பித்த நடவடிக்கையை பா.ஜ.க கடுமையாக விமர்சித்தது. அதிகாரப்பூர்வ வரைவு மசோதா தயார் செய்த பிறகு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும் என மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் சுட்டிக்காட்டினார். தவிர்க்க முடியாத சூழலில் இக்கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.

மசோதாவை அரசு தாக்கல் செய்து பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பிய பிறகு மசோதாவின் பிரிவுகள் குறித்து விவாதிக்கலாம். லோக்பால் பல்வேறு விஷயங்களில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து உண்டு என தெரிவித்த சுஷ்மா சுவராஜ் மாநிலங்களிலிருந்தும், இதர அமைப்புகளிலிருந்தும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை. அதே சமயம், அச்சட்டம் எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரித்து கடுமையான தண்டனை வழங்க இப்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்று கருத்து உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

லோக்பால் சட்டம் மற்ற சட்டங்களிலிருந்தும், ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளிலிருந்தும் திசை மாறக்கூடாது. அரசமைப்பு சட்டத்தில் ஏற்கனவே உள்ள சட்டவிதிகளை லோக்பால் மசோதாவில் சரியானப்படி இடம் பெற செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பிரதமரை லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நாகேஷ்வரராவ் தெரித்தார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் அன்னா ஹஸாரேவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அரசை மிரட்டி பிணைத்தொகையை கோருகிறார் அன்னா ஹஸாரே என சி.பி.ஐ, ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 120 கோடி மக்கள் எங்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்துள்ளனர். அன்னா ஹஸாரேயையும், அவருடைய குழுவினரையும் யார் தேர்ந்தெடுத்தார்கள்? என ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தின் சர்வாதிகாரத்தை சில தர்ணாக்காரர்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டக்காரர்களின் முன்னால் அரசு மண்டியிட வைக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், பவன்குமார் பென்ஸல், சல்மான் குர்ஷித், கபில் சிபல், தி.மு.கவின் டி.ஆர்.பாலும், அ.இ.அ.தி.மு.கவின் தம்பித்துரை, மைத்ரேயன், பா.ஜ.கவின் சுஷ்மா சுவராஜ், எல்.கே.அத்வானி, அருண் ஜெட்லி, பகுஜன் சமாஜ் கட்சியின் எஸ்.ஸி.மிஷ்ரா, சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் யாதவ், இடதுசாரிகள் சார்பாக சீதாராம் யெச்சூரி, குருதாஸ் தாஸ் குப்தா, டி.ராஜா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பாக லல்லுபிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத்பவார், பிரஃபுல் பட்டேல் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ராஷ்ட்ரீய லோக்தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். சிவசேனா, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza