பெய்ரூத்:லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலையை விசாரித்துவரும் ஐ.நா ஆதரவுடைய தீர்ப்பாயம் மூத்த நான்கு ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லெபனானுக்கான சிறப்பு தீர்ப்பாயம் (எஸ்.டி.எல்) உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பிற்கு பிறகு ப்ராஸிக்யூட்டர் ஜெனரல் ஸஈத் மிர்ஸா இதனை வெளியிட்டார்.
ஹிஸ்புல்லாஹ்வின் மூத்த உறுப்பினர்களான அஸத் ஸப்ரா, ஹஸன் ஈஸா, ஸாலிம் அயாகி முஸ்தஃபா, பத்ருத்தீன் ஆகியோருக்கு கைது வாரண்ட் என பிரிட்டீஷ் பத்திரிகையான கார்டியன் தெரிவித்துள்ளது. ஹேக் தலைமையிடமாக கொண்டு செயல்படும் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் பெய்ரூத் சென்றதை தொடர்ந்து நேற்று தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ப்ராஸ்க்யூட்டர் ஜெனரல் ஸஈத் மீர்ஸாவுடன் தீர்ப்பாய உறுப்பினர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குள்ளாகவே லெபனான் பத்திரிகைகள் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டன.
ஹரீரி கொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை. ஐ.நா தீர்ப்பாயம் அநியாயமாக ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக செயல்படுகிறது என முன்னரே அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. தீர்ப்பாயத்திற்கு லெபனான் அளித்துவரும் ஆதரவை நிறுத்த வேண்டும் என கோரி ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பிரிவு லெபனான் காபினெட்டிலிருந்து விலகியது. மேலும் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. தீர்ப்பாயத்தின் நடவடிக்கையை ஹரீரியின் மகனும், முன்னாள் பிரதமருமான ஸஅத் அல் ஹரீரி வரவேற்றுள்ளார்.
இது வரலாற்று நிமிடமாகும். நாட்டிற்கு இது ஒரு மைல்கல்லாகும் என அவர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த ஹிஸ்புல்லாஹ், வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றிற்கு பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் என குற்றம் சாட்டியுள்ளது. தீர்ப்பாயத்தின் கண்டுபிடிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் எனவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான ஆதாரங்களை கொண்டுவர வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் குற்றவாளிகள் ஆகமாட்டார்கள் என லெபனான் பிரதமர் நஜீப் மீக்காத்தி தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த ரஃபீக் அல் ஹரீரி கடந்த 2005-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இதர 22 நபர்களுடன் தலைநகரான பெய்ரூத்தில் நடந்த பலத்த கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.
தீர்ப்பாயத்தின் அறிவிப்பு லெபனானில் அரசியல் ஸ்திரமற்றத்தன்மையை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. லெபானனில் மிக அதிகமான மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகளில் ஒன்று ஹிஸ்புல்லாஹ். ஒரு வருடமாக ஸஅத் அல் ஹரீரியின் அமைச்சரவைக்கு ஹிஸ்புல்லாஹ் ஆதரவு தெரிவித்த போதிலும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்றிருந்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment