வாஷிங்டன்:இருநாடுகளுக்கு இடையேயான உறவு சீர்குலைந்திருக்கும் வேளையில் பாகிஸ்தானுக்கு அளித்துவரும் ராணுவ உதவியில் 3-இல் ஒரு பகுதியை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 80 கோடி டாலர் உதவியை ரத்து செய்துள்ளதாக மூன்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
200 கோடி டாலர் ராணுவ உதவித்தொகையை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவருகிறது. பாகிஸ்தானுடன் உறவு மேம்பட்டால் நிதியுதவியும், ஆயுதங்கள் வழங்குவதும் மீண்டும் புனரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தாலிபானுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் எல்லையில் ஒரு லட்சம் ராணுவத்தினரை நிறுத்த 30 கோடி டாலரை அமெரிக்கா அளித்தது. பயிற்சிக்கும், ஆயுதங்களுக்கும் இதர 50 கோடி டாலர் விநியோகிக்கப்படுகிறது. பாகிஸ்தானுடன் வலுவான நிலைப்பாட்டை மேற்கொள்வோம் என கடந்த மாதம் பெண்டகன் வட்டாரங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
சி.ஐ.ஏ ஏஜண்ட் அநியாயமாக இரண்டு பாகிஸ்தானியர்களை லாகூரில் சுட்டுக்கொன்றது, எல்லையை அத்துமீறி பாகிஸ்தானிற்குள் நுழைந்த அந்நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் அல்காயிதாவின் தலைவர் என கூறப்படும் உஸாமா பின்லேடனை கொலைசெய்தது(?), பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து அமெரிக்காவின் அக்கிரமமான ஆளில்லா விமானத்தாக்குதல் ஆகியன இருநாடுகளிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் மக்கள் கொந்தளிப்பு அதிகமாகி வருகிறது. மக்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்த 100 அமெரிக்க ராணுவத்தினரை பாகிஸ்தான் வெளியேற்றியது. அல்காயிதா தொடர்பான தகவல்களை புலனாய்வு செய்த பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் பாக்.அதிகாரிகளுக்கு தெரியும் என அமெரிக்க ராணுவ தலைவர் மைக் முல்லன் வெளியிட்ட அறிக்கை இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment