லண்டன்:தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஊடக முதலையான ரூபர்ட் மர்டோக்கை பிரிட்டன் பாராளுமன்ற குழு தலைவர் விசாரணை நடத்தும்வேளையில் வெளியேயிருந்து வந்த மர்ம நபர் தாக்க முயற்சித்தார். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அவரை தடுத்ததையடுத்து மர்டோக் தாக்குதலில் இருந்து தப்பினார்.
தாக்குதல் நடத்த வந்த நபர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தாக்குதல் முயற்சியை தொடர்ந்து விசாரணை சற்று நேரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடர்ந்தது. இவ்வளவு தீவிரமாக தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு நடந்தது குறித்து விசாரணை குழுவினர் வெளியிடும்வரை தனக்கு எதுவும் தெரியாது என மர்டோக் விசாரணையின்போது தெரிவித்தார்.
நிறுவனத்தின் சில அதிகாரிகள் என்னை தவறுகளின் பக்கம் வழி நடத்தினர். வாழ்க்கையில் மிகவும் நாணங்கெட்ட தினமாகும் என மர்டோக் தெரிவித்தார். நாற்பது ஆண்டுகளாக ஊடக உலகை அடக்கி ஆளும் மர்டோக் முதன்முறையாக எம்.பிக்களின் கேள்விகளுக்கு முன்னால் வியர்த்துவழிந்தார்.
தொலைபேசி ஒட்டுகேட்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ரூபர்ட் மர்டோக்கின் மகன் ஜேம்ஸ் மர்டோக் மன்னிப்புக்கோரினார். தாங்கள் எதிர்பார்த்த தரத்தை நிலை நாட்டுவதில் நிறுவனம் தோல்வியடைந்துவிட்டது. இத்தகைய சம்பவங்கள் தொடராது என அவர் உறுதியளித்தார். தொடர்ந்து தங்களது பணியை தொடரப்போவதாக தெரிவித்த ஜேம்ஸ் அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள நியூஸ் இண்டர்நேசனலின் தலைவராவார்.
பிரிட்டன் பாராளுமன்றத்தின் கலாச்சார, ஊடக, சுற்றுலா குழுவின் தலைவர் ஜான் விட்டிங்டயில் தலைவராக கொண்ட குழுதான் மர்டோக் மற்றும் அவரது மகனை விசாரணைக்காக அழைத்தது.
நாட்டில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள இச்சம்பவத்தை அதிர்ச்சியுடன் அறிந்தேன் என விட்டிங்டயில் விசாரணைக்கு முன்பு தெரிவித்தார். முன்னர் பாராளுமன்ற குழுவின் முன்பாக ஆஜராகமாட்டேன் என தெரிவித்த மர்டோக் பின்னர் முடிவை மாற்றினார். நியூஸ் இண்டர்நேசனலின் முன்னாள் சி.இ.ஒ ரபேக்கா ப்ரூக்ஸிடமும் பாராளுமன்ற குழு விசாரணை நடத்தியது.
நியூஸ் இண்டர்நேசனலின் கீழ் செயல்படும் நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிகை பரபரப்பான செய்திகளுக்காக பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்பத்திரிகையின் பிரபலங்கள் கைதானவுடன் மர்டோக்கிற்கு பாராளுமன்ற குழுவின் முன்னால் ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
கடத்திச்செல்லப்பட்டு பின்னர் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மில்லி டவுலர் என்ற பள்ளிக்கூட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு மஸாலா செய்திகளாக அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஈராக்கிலும், ஆப்கானிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், ராஜ குடும்பத்தினர் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து மர்டோக்குடன் நெருங்கிய உறவை வைத்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment