Saturday, July 16, 2011

மும்பை குண்டு வெடிப்பு:குஜராத் மாநிலத்தில் பதிவு செய்த ஸ்கூட்டர் அடையாளம் காணப்பட்டது

mumbai blast
புதுடெல்லி/மும்பை:18 நபர்களின் மரணத்திற்கு காரணமான மும்பை குண்டு வெடிப்பில் உபயோகித்த ஸ்கூட்டர் அடையாளம் காணப்பட்டது. ஜவேரி பஸாரில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உபயோகித்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். ஆனால், குண்டு வெடிப்பின்  பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து போதுமான விபரங்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

அம்மோனியம் நைட்ரேட், டி.என்.டி, எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றின் கலவையை டைமர் உபயோகித்து வெடிக்க செய்துள்ளார்கள். ஆர்.டி.எக்ஸ் உபயோகிக்கவில்லை என்பது தடவியல் நிபுணர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்கூட்டரின் சேஸிஸ் எண் அழிக்கப்பட்டிருந்தாலும் அதனை அடையாளம் காண முடிந்துள்ளது. குஜராத்தில் பதிவு செய்திருந்த இரு சக்கர வாகனம் சில மாதங்களாக மும்பையில் உபயோகித்து வந்துள்ளது போலீஸ் கண்டறிந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பிற்கு உபயோகித்த இருசக்கர வாகனத்தின் சேஸிஸ் நம்பரும் அழிக்க முயற்சி நடந்தது தெரியவந்தது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏராளமானோரை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு கிடைத்த மின்னஞ்சலின் உறைவிடத்தை குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்திய முஜாஹிதீன் உறுப்பினர்கள் என குற்றம் சாட்டி குண்டு வெடிப்பிற்கு முன்பு கைது செய்யப்பட்ட இரண்டு பேரை போலீஸ் விசாரணை செய்துள்ளது. நிழலுகத்துடன் தொடர்புடையவர்களையும் இதர கிரிமினல் தொடர்பு குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடங்களில் நிறுவப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை பரிசோதித்து புதிய நபர்கள் எவரேனும் அதில் உள்ளனரா என்பதை புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். காட்சிகள் அடங்கிய இத்தகைய 11 சி.டிக்களை பரிசோதிக்க கால அவகாசம் தேவைப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்து முதல் 15 நிமிடங்களில் மூத்த போலீஸ் அதிகாரிகள் ஒருவரை கூட தனது மொபைல் போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை என மஹராஷ்ட்ரா மாநில முதல்வர் பிரதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பை தொடர்ந்து உபயோகம் அதிகரித்ததை தொடர்ந்து மொபைல் டவர்களும், தொலைபேசி லைன்களும் செயல்படாமல் போனதன் மூலம் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது கவலைக்குரியது என அவர் தெரிவித்தார்.

சேட்லைட் போன் உபயோகிப்பதோ, அல்லது அதைப்போன்ற இதர தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவது தான் மாற்று வழி. இத்தகைய சம்பவங்கள் நிகழாமலிருக்க மாற்று ஏற்பாடுகளை உடனடியாக உருவாக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மும்பை தாக்குதலின் பின்னணியில் ராம்ப்ரதான் கமிட்டி சமர்ப்பித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை என சவான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில் தெரிவித்துள்ளார்.

மாநில உள்துறையை கூட்டணிக்கட்சியான என்.சி.பிக்கு அளித்தது தவறு என அவர் தெரிவித்தார். முந்தைய சிவசேனா-பா.ஜ.க அரசின் நடைமுறையை பின்பற்றி உள்துறையை கூட்டணி கட்சிக்கு வழங்கியதாகவும், இதனை மறு பரிசீலனை செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் மும்பை குண்டு வெடிப்பு விசாரணையில் இந்தியாவுக்கு எல்லாவித உதவிகளையும் அளிக்க தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza