ஓஸ்லோ:நார்வேயில் நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பே கிறிஸ்தவ வலதுசாரி பயங்கரவாதி ஆண்டேர்ஸ் ப்ரவிக் போலியான பெயரில் தனது திட்டத்தை விவரிக்கும் குறிப்புகளை விரிவாக விளக்கும் 1500 பக்கங்களை கொண்ட ஆன்லைன் புத்தகத்தை வெளியிட்டதாக நார்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு சற்று முன்பு இந்த புத்தகம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ ப்ரெவிக் என்ற போலி பெயரில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் ஆயுத பயிற்சியை குறித்தும், எதிர்காலத்தில் சந்திக்கவேண்டிய நீதிமன்ற நடவடிக்கைகள், விசாரணைகள், ஊடக நேர்முகங்கள் ஆகியன தொடர்பான தயாரிப்புகள் தொடர்பாகவும் எழுதப்பட்டுள்ளது. இதனைத் தவிர கூட்டுப் படுகொலைக் குறித்து விளக்கும் ’டெக்ஸ்டர்’ என்ற தொலைக்காட்சி தொடரை தொடர்ச்சியாக பார்க்கவேண்டும் எனவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுப் படுகொலையை தொடர்ந்து தனக்கு ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரத்தைக் குறித்தும் பயங்கரவாதி ஆண்டேர்ஸ் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான். தான் ஒருபோதும் சுயநலவாதியாகவோ, இனவாதியாகவோ இருக்கவில்லை. தனது பாட்டனும், பாட்டியும் குடியேற்றக்காரர்களாக இருந்தபோதும் பின்னர் நாட்டின் அனைத்து மக்களுக்காக செயல்படும் இலட்சியவாதியாக மாறிவிட்டேன் என ஆண்டேர்ஸ் கூறியுள்ளான்.
எனது செயலை அங்கீகரிக்க பலர் தயங்குவர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் இதன்பெயரில் என்னை வாழ்த்துவார்கள். எனது செயல் மூலம் பலனை அனுபவிப்பது எதிர்கால சமுதாயமாகும் என ஆண்டேர்ஸ் தனது புத்தகத்தில் விவரித்துள்ளான்.
இதற்கிடையே, துப்பாக்கியுடன் நிற்கும் ஆண்டேர்ஸ் ப்ரெவிக்கின் புகைப்படங்கள் யூ ட்யூப் வீடியோ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக இந்த வீடியோ போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இக்காட்சிகளுடன் முஸ்லிம் விரோத செய்திகள் உள்ளன. ஐரோப்பாவில் இஸ்லாம் பரவி வருவதாக பரப்புரைச் செய்யும் நாசி ஆன்லைன் ஃபாரத்தில் ப்ரெவிக் உறுப்பினராக இருந்துள்ளான்.
ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஆண்டேர்ஸ் சமீபத்தில் கணக்குகளை துவக்கியுள்ளான். ப்ரெவிக்கிற்கு வரும் கமெண்டுகளில் பெரும்பாலும் நார்வேயின் வலதுசாரிகளின் குடியேற்ற/முஸ்லிம்/கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரிவினருடையதாகும். நார்வேயின் குடியேற்ற எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினரான ஆண்டேர்ஸ் பன்முக சமூகத்தை விமர்சித்து வலைப்பூக்களில் தொடர்ந்து எழுதுவதுண்டு.
0 கருத்துரைகள்:
Post a Comment