Tuesday, July 5, 2011

சிறுவனை சுட்டுக்கொன்ற சம்பவம்:சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

armychennai_meenakshi_271x181
சென்னை:ஞாயிற்றுக்கிழமை சென்னை தீவுத்திடலில் ராணுவ குடியிருப்பிற்குள் பழம் பொறுக்க சென்ற 13 வயது சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், குற்றவாளிகளை சும்மாவிடமாட்டோம் என ராணுவம் அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் சோதனை நடத்த அதிகாரிகளின் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் (நிர்வாக பிரிவு) சசி நாயர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ராணுவ வீரரால் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை மாநில போலீசாரிடம் ஒப்படைக்க அவர் ராணுவத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதுத்தொடர்பாக முதன்மை செயலாளர் ஜெனரல் கமாண்டிங் ஆபிஸருக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சுடப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு சிகிச்சை தர வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல் ராணுவத்தினர் நடந்துள்ளனர் என பா.ம.க தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதற்கு காரணமான ராணுவ வீரரை தமிழக காவல் துறையினர் கைது செய்து அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மரம் ஏறி பழம் பறித்த சிறுவனை எச்சரிக்கை செய்யாமல், உச்சந்தலையைக் குறிபார்த்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது ஈவு இரக்கமற்ற செயலாகும். உயிரற்ற நிலையில் தொங்கிய சிறுவனை இலை, தழைகளைக் கொண்டு மறைத்தும், ரத்தக் கறைகளை கழுவியும் தடயங்களை அழித்துள்ளனர். இது மேலதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது.

சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ வீரரை, உடனடியாக தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கொலையாளியை கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza