Friday, July 15, 2011

எகிப்து:600 போலீஸ் அதிகாரிகள் பதவி நீக்கம்

Egypt-600-police-officers-Dismisses-to-crackdown-on-protesters
கெய்ரோ:எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று 600 மூத்த போலீஸ் அதிகாரிகளை எகிப்திய அரசு பதவியிலிருந்து வெளியேற்றியுள்ளது. குற்றவாளிகளை பதவிகளிலிருந்து நீக்க கோரி கடந்த ஒருவாரகாலமாக எதிர்ப்பாளர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தை தொடரும் வேளையில் உள்துறை அமைச்சர் மன்சூர் அல் இஸ்ஸாவி இந்த அறிவிப்பை செய்துள்ளார். போலீஸ் படையில் நடந்த மிகப்பெரிய மறுசீரமைப்பு பணி என அவர் இதனை குறிப்பிட்டார்.

ஓய்வு பெறும் வயதை தாண்டியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 37 பேரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

505 ஜெனரல்கள், 82 பிரிகேடியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் போது 850 பேர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே செப்டம்பரில் நடத்தவிருந்த தேர்தல் இரண்டுமாதம் தாமதம் ஆகும் என அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தேர்தலுக்கான நடவடிக்கைகள் துவங்கும். புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு 100 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வுச்செய்வதற்கான வரைவு மசோதா உருவாக்கப்படும் என ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza