Tuesday, July 26, 2011

கராச்சி கலவரம்:3 தினங்களில் 44 பேர் பலி


Supporters of political party Muttahida Qaumi Movement burn an effigy representing provincial minister Zulfikar Mirza during a protest in Karachiகராச்சி:பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் மூன்று தினங்களாக தொடரும் கலவரத்தில் 44 பேர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமை சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் கலவரம் துவங்கியது.

பாகிஸ்தானில் பிரபல அரசியல் கட்சியான முத்தஹிதா குவாமி மூவ்மெண்டும், அதிலிருந்து பிரிந்த முஹாஜிர் குவாமி மூவ்மெண்ட்-ஹகீகியும் கராச்சியின் மண்ணை இரத்தகளரியாக மாற்றியுள்ளன.

அரசியல் மோதல்கள் தொடர்கதையான கராச்சியில் ஜூலை மாதம் மட்டும் 339 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.


பல்வேறு பழங்குடி இன மக்களிடையே பெரும்பாலும் கராச்சியில் போருக்கு சமமான மோதல்கள் நடைபெறுவதுண்டு. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் கராச்சியில் குடியேறிய முஹாஜிர் பிரிவினரும், உள்ளூர்வாசிகளான புஷ்தூன் பிரிவினரும் 1.8 கோடி மக்கள் வசிக்கும் கராச்சியில் முக்கிய பிரிவினர்களாவர்.

இதில் முஹாஜிர் பிரிவினரின் செல்வாக்குப் பெற்ற முத்தஹிதா குவாமி கட்சி தற்போதைய கலவரத்தின் ஒரு புறத்தில் உள்ளது. புஷ்தூன் பிரிவினருக்கு பிரதிநிதியாக செயல்படும் அவாமி நேசனல் கட்சியும், பாகிஸ்தான் பீப்பிள்ஸ் கட்சியும் முத்தஹிதா குவாமி மூவ்மெண்டுடன் மோதியிருந்தாலும் தற்பொழுது அவ்வாறான மோதல் இல்லை என கூறப்படுகிறது.

நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சூழலில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியாக ஆதாயம் பெற முயல்வதாக சிந்து மாகாண செய்தி ஒலிபரப்பு அமைச்சர் ஷெர்ஜின் மெமோன் கூறுகிறார்.

கலவரத்திற்கு தலைமை வகித்தவர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. இவர்களை பிடிப்பதற்காக 200 போலீஸ் கமாண்டோக்களை நியமித்துள்ளதாக கராச்சியில் மூத்த போலீஸ் அதிகாரி நயீம் அறிவித்துள்ளார்.

ஆறுமாதங்களிடையே பாகிஸ்தானில் 1138 பேர் பல்வேறு உள்நாட்டு கலவரங்களில் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறது. இவர்களில் 490 பேர் பழங்குடியின கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza