மாஸ்கோ:மத்திய ரஷ்யாவின் டாட்டர்ஸ்தானில் சுற்றுலா பயணிகளின் படகு மூழ்கியதில் 128 பேர் மரணித்துள்ளனர். 80 பேர் உயிர்தப்பியுள்ளனர். மரணித்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் ஆவர். 208 சுற்றுலா பயணிகளுடன் மாகாண தலைநகரான கஸானிக்கு சென்றுக் கொண்டிருந்த பல்கேரியா என்ற படகு விபத்தில் சிக்கியது.
55 ஆண்டுகள் பழமையான இரண்டு அடுக்குகளை கொண்ட படகு சூறாவளிக்காற்றில் கவிழ்ந்தது. சில நிமிடங்களுக்குள்ளாகவே படகு மூழ்கிவிட்டது என தப்பித்தவர்கள் கூறினர். 50 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதர நபர்களின் உடல்கள் படகில் சிக்கியிருப்பதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கரைப்பகுதியிலில் இருந்து 80 கி.மீ தொலைவில் வோல்கா நதியின் மிகப்பெரிய அகலமான பகுதியில் 260 அடி நீளங்கொண்ட படகு மூழ்கியது. இதனால் மீட்பு பணி சிக்கலாகியுள்ளது. அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சிறிய படகு ஏராளமானோரை காப்பாற்றியுள்ளது. இரண்டு தினங்களைக் கொண்ட பயணத்தை துவங்கும்பொழுதே படகின் இரண்டு எஞ்சின்களில் ஒன்று பழுதடைந்திருந்தது என இதார்-டாஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
துவக்கத்திலேயே படகு ஒரு பக்கம் சரிந்திருந்ததாக தப்பித்தவர்கள் கூறுகின்றனர். 120 நபர்கள் மட்டுமே செல்லும் கொள்ளளவைக் கொண்ட படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தைக் குறித்து தகவல் அளிக்கும் உபகரணம் கூட படகில் இல்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக துயர்துடைப்பு அமைச்சர் ஸெர்ஜி ஷொய்கு தெரிவித்துள்ளார். வெளிநாட்டின் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஐரோப்பாவின் மிகவும் நீளமான நதிதான் வோல்கா.

0 கருத்துரைகள்:
Post a Comment