மும்பை:டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளரான நீரஜ் க்ரோவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சார்ந்த முன்னாள் கப்பல்படை அதிகாரியான எமிலி ஜெரோம் மாத்யூவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை மும்பை செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ளது. எமிலியின் காதலியும், கன்னட நடிகையுமான மரியா சூஸை ராஜுவிற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
இருவரும் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் நீதிமன்றம் கண்டறிந்தது. அரசு தரப்பு கொலையின் நோக்கத்தை கண்டறிய இயலாததால் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது பலகீனமான குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றகரமான குரூரமான கொலைக்கும், ஆதாரங்களை அழித்ததற்கும் எமிலி ஜெரோமிற்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரங்களை அழித்ததற்காக மரியா சூஸைராஜுவிற்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் 3 ஆண்டுகள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்படுவார். வேண்டுமென்றே குற்றவாளி இக்குற்றத்தை செய்யவில்லை எனவும், சூழ்நிலையின் அழுத்தம் காரணமாக இளைஞர் இக்கொலையை நடத்தியதாக தீர்ப்பு கூறும் வேளையில் நீதிபதி தெரிவித்தார். காதலியின் அறையில் நுழையும் போது எமிலி அமைதியாகவே இருந்தார். ஆனால், தனது காதலியுடன் வேறொரு நபரை காணும் பொழுது இயற்கையாகவே ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்துவிடுவார் என சிறிய தண்டனையை அளித்துவிட்டு நீதிபதி தெரிவித்தார்.
2008 மே மாதம் 7-ஆம் தேதி இவ்வழக்குத் தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. மலாத் என்ற இடத்தில் தனது காதலி வசித்துவந்த வீட்டிற்கு வந்த எமிலி ஜெரோம் எதிர்பாராத விதமாக நீரஜ் க்ரோவரை தனது காதலியின் அறையில் பார்த்துள்ளார். தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே எமிலி நீரஜை கத்தியால் குத்தினார். பின்னர் எமிலியும், மரியாவும் சேர்ந்து நீரஜின் உடலை துண்டு துண்டாக வெட்டி தானேவில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment