சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"தமிழகத்தில் சமச்சீர் கல்வியை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான ஆய்வுக்குழுவில் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களை நியமித்ததை நீக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசுவாமி கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, ஐயப்பா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க குமரி மாவட்ட குழு தலைவர் சாம்ராஜ், செயலாளர் சந்தியா கூறுகையில்,
"தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. வழக்கு விசாரணை என்று கூறி திட்டத்தைச் செயல்படுத்த முட்டுக்கட்டையிட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டிலேயே முழுமையான கல்வி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள சிலர் கல்வியாளர்களே இல்லை. அவர்களை நீக்கிவிட்டு தகுதியானவர்களை நியமனம் செய்ய வேண்டும்" என்றனர்.
கோடைவிடுமுறைக்குப் பின்னர் பெரும்பாலான கல்லூரிகளில் நேற்றுதான் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கின. மறுநாளே மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment