முன்னரே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராக்குமார் கூட்டினார். இந்தச் சட்டம் நிறைவேறினால்தான் பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். இதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், 14 ஆண்டுகள் ஆகியும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இந்தச் சட்ட மசோதா கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி மேல்-சபையில் நிறைவேறியது. ஆனால் நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேறவில்லை. பலமுறை அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியும் இந்தப் பிரச்சினையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
இந்த நிலையில், வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக ஆலோசிக்கவே, நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராகுமார் நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்திலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
நேற்றைய கூட்டத்தில் பாரதீய ஜனதா, சிவசேனா, அதிமுக., திமுக., திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தலைவர்கள், "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.
"பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பாரதீய ஜனதா தன் முழு ஆதரவை அளிக்கும்" என்று கூறிய எதிர்க்கட்சி பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ், "இந்தப் பிரச்சினையில் அவைத்தலைவர் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.
சிவசேனா எம்.பி. ஆனந்த் கீதே பேசுகையில், "நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்குப் பதிலாக, தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெண்களுக்கு 33 சதவீத சீட்டுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளலாம்" என்று யோசனை தெரிவித்தார்.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் பேசுகையில், "பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்றார்.
இப்படியாக கூட்டத்தில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், இக்கூட்டத்திலும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை இப்போது உள்ள நிலையிலேயே நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராகுமார், "கூட்டத்தில் கலந்து கொள்ளாத பெண்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அந்தக் கட்சிகளை தனியாக அழைத்து பேச இருப்பதாக" குறிப்பிட்டார். மேலும், "ஒருமித்த கருத்தை எட்டும் வரையில் முயற்சிகள் தொடரும்" என்ற அவர், "மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன் மீண்டும் ஒருமுறை அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த இருப்பதாக" தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment