"அரசுத் துறை ஊழியர்களின் மீதான ஊழல் வழக்குகளையும், லோக்பால் தான் விசாரிக்க வேண்டும் என, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்துவது சாத்தியமற்றது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் லோக்பால் விசாரிப்பது நடைமுறைக்கு ஒத்து வராது" என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அரசுத் துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களில் இருந்து, உயர்மட்ட அதிகாரிகள் வரை, அனைவரின் மீதான ஊழல் புகார்களையும், லோக்பால் அமைப்புதான் விசாரிக்க வேண்டும் என, அன்னா ஹசாரே உட்பட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இதில், நடைமுறை சிக்கல் உள்ளது. அரசுத் துறையில் பணியாற்றுவோர்மீது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்படுவதால், இவை அனைத்தையும் லோக்பால் விசாரிக்க முடியாது. இது மிகப்பெரிய வேலையாகி விடும்.
நியாய விலைக் கடைகளில் பணியாற்றுவோர், ரேஷன் கார்டு வழங்குவோர், டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை வினியோகம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவோர் மீது தான், அதிகமாக லஞ்ச குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இணைச் செயலர் மற்றும் அதைவிட உயர்வான பதவிகளில் உள்ளவர்கள் மீதான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் ஏற்க மறுக்கின்றனர்.
மேலும், பிரதமர் பதவி வகிப்போரையும், லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். நடைமுறையில் இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, பிரதமர் மீது, ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால், விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில்,பிரதமராக இருப்பவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், மத்திய அரசில் நிலையான தன்மை இருக்காது. பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும்" என்று பெயர்குறிப்பிட விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment