Monday, June 20, 2011

திகார் சிறையில் நேர்முகம் - 2 கைதிகளுக்கு வேலை!

2G வழக்குகளுக்குப் பிறகு பிரபலமாகியுள்ள திகார் சிறையில் இரண்டு தண்டனைக் கைதிகள், வளாக நேர்முகத் தேர்வு (campus interview) செய்யப்பட்டு நல்ல வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தண்டனைக்காலம் முடிந்து திகார் சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதன்முறையாக, கடந்த பிப்ரவரி 25 அன்று, சில தனியார் நிறுவனங்கள், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின.

இதில், வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தீப் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. ஜார்ஜ் ஆய்வக உதவியாளராகவும், சந்தீப் விற்பனை பிரதிநிதியாகவும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: "திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் அதிகமாக இருந்தது. சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு வேலை கிடைப்பது அரிது. அதிலும், அவர்களை யாரும் மதிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், சிறையில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எங்களுக்குக் கவுரவமான வேலை கிடைத்துள்ளது.

சமூகத்தில் இப்போது, நாங்கள் கவுரவமாக வேலைக்குச் சென்று வருகிறோம். எங்கள் சக ஊழியர்களும் எங்களைக் கவுரவமாக நடத்துகின்றனர். இந்தக் கவுரவத்திற்கு, எங்கள் சிறை அதிகாரி நீரஜ்குமார்தான் காரணம். கைதிகளின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டிருக்கும் அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினர்.

இதுகுறித்து, திகார் சிறை அதிகாரி நீரஜ்குமார் கூறியதாவது:

"சிறையிலிருந்து விடுதலையான இருகைதிகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் திருந்தி, சமூகத்தில் கவுரவமான நிலைக்கு உயர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எவ்வித தயக்கமுமின்றி, முன்னாள் சிறைக் கைதிகளுக்கு வேலை வழங்கிய நிறுவனம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்நிலை அதிகரிக்க வேண்டும். இதே போன்று, திகாரில் உள்ள மற்ற சிறைகளுக்கும் நேர்முத தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

முன்மாதிரியாக செயல்பட்டு முன்னாள் கைதிகளுக்கு வேலை தந்த நிறுவனத்துக்கும் குற்றவாளிகளை மனிதர்களாக மதித்து அவர்களின் எதிர்காலத்தைச் சிறந்ததாக மாற்ற உழைக்கும் திகார் சிறை அதிகாரி நீரஜ்குமாருக்கும் பொது மக்களிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza