சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்வர் தான் போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் தான் செய்த செலவுகள் ரூ. 9 லட்சம் என்று கணக்கு சமர்ப்பித்துள்ளார். முன்னாள் முதல்வரோ அதில் பாதிதான் செலவு செய்துள்ளாராம்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தாங்கள் செய்த செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 16 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றோர் 10 லட்சத்துக்கும் குறைவாகவே செலவு செய்துள்ளளதாக அவர்கள் தாக்கல் செய்துள்ள கணக்குகளில் இருந்து தெரியவந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா ரூ. 9.5 லட்சம் செலவு செய்துள்ள நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் 3 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளார்.
பொதுக்கூட்டங்களுக்காக ரூ 20,650-ம், துண்டுப்பிரசுரங்கள், போஸ்டர்கள், விடியோ, ஆடியோ கேஸட்டுகள் மூலமான பிரசாரத்துக்காக ரூ 14,170-ம் ஜெயலலிதா செலவு செய்துள்ளார். மின்னணு மற்றும் அச்சு ஊடகம் மூலமான பிரசாரத்துக்கு ரூ 58,300-ம் வாகனங்களுக்காக ரூ 65,700-ம் அலங்காரங்கள் மற்றும் பேனர்களுக்காக ரூ 32,300-ம் அவர் செலவு செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னுடைய தேர்தல் செலவு ரூ 4,47,615 என்று கூறியுள்ளார். வாகனங்களுக்கு அவர் ரூ 2 லட்சம் செலவு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளார். அவர் பொதுக்கூட்டங்களுக்காக ரூ 66,700-ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக வெறும் ரூ. 980-ம் செலவு செய்துள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்கபாலு, ரூ 4.04 லட்சம் செலவு செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ 7.97 லட்சம் செலவு செய்துள்ளார்.
தேர்தல் ஆணைய வட்டாரத் தகவலின்படி 223 வேட்பாளர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்கள் மீது 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment