ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்த இருவருக்கு நடுத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விபச்சார வழக்குகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து, அதை வீடியோ படமெடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்த நிலையில், கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிய பின்னர் வாகனம் நகர்த்தப்பட்டது. உயிர் பிரிந்தப்பின் இருவரது உடலையும் தூக்குக் கயிற்றிலேயே சிறிது நேரம் மக்கள் காட்சிக்காக அப்படியே விடப்பட்ட பின்னர் காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்தினர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.
ஈரானில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையான ஈமா (IMA), கூடியிருந்த பொதுமக்கள் 'இந்தத் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தாக' செய்தி வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை இதுவாகும் என்று 'அசோசியேட்டட் பிரஸ்' தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் 179 மரண தண்டனை ஈரானில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதனைவிட அதிக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கழகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான், அதிக மரண தண்டனைகள் வழங்கும் நாடாக உலக அளவில் முதலில் இருக்கும் சினாவிற்கு அடுத்தநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment