ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.
சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.
அதேசமயம்,ஆயிசாவின் பிரேதத்தைப் பெறுவதற்காக மருத்துவமனை வந்திருந்த ஆயிசாவின் உறவினர்கள் அது ஆயிசாவின் உடலாக வழங்கப்பட்ட பிரேதத்தில் கையில் சுந்தரி சைன் என்று பச்சை குத்தியிருந்ததைக் கண்டு வாங்க மறுத்துள்ளனர்.
பிரேதக் கிடங்கு ஆவணங்களைச் சரிபார்த்த மருத்துவர்கள், சுந்தரி சைனின் கணவர் தவறுதலாக ஆயிஷாவின் உடலை தமது மனைவியின் உடலென்று ஒப்புக்கொண்டு அடையாளம் காட்டி, கையெழுத்திட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருவரின் பிரேதமும் 80 சதவீதத்திற்கும் மேலாக தீக்கிரை ஆனதால் முகம் மற்றும் உடல்முழுதும் பிளாஸ்திரியால் மூடப்பட்டிருந்ததால் சுனில் சைன் தவறுதலாக ஆயிஷாவின் உடலைச் சுந்தரியின் உடலாக அடையாளம் காட்டியுள்ளார்.
ஆயிசாவின் பிரேதத்தைக்கேட்டு மருத்துவமனை வளாகத்தில் சப்தமிட்ட உறவினர்களில் சிலர் சுந்தரி சைனின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். எனினும், ஆயிஷாவின் உடலைச் சுந்தரியின் உறவினர்கள் இந்து முறைப்படி ஈமக்கிரியை செய்துள்ளதாகத் தெரியவந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொந்தளித்துப் போயிருந்த இரு பெண்களின் உறவினர்களிடமும் பேசிய காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் செய்ததைத் தொடர்ந்து ஆயிசாவின் உறவினர்கள் சோகத்துடன் கலைந்து சென்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment