Sunday, May 29, 2011

அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி புதிதாக எதையும் தெரிவிக்கவில்லை: மன்மோகன் சிங்!

அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள தீவிரவாதி டேவிட் ஹெட்லி, புதிதாக எதையும் தெரிவித்து விடவில்லை. அவர் கூறிய தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவைதான் என்று  பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளின் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று சனிக்கிழமை டெல்லி திரும்பினார். விமானத்தில் தன்னுடன் வந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கப்படுமா என கேட்டதற்கு, "இப்போதைக்கு தி.மு.க. எங்கள் கூட்டணி கட்சி. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பற்றி கேட்டதற்கு, "2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையை பொறுத்த மட்டில் சி.பி.ஐ. தனது பணிகளை செய்து வருகிறது. மேலும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அதனால் அதுபற்றி நான் ஏதாவது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது'' என்று பதில் அளித்தார்.

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

நாகரிக மனித சமுதாயத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் வலிமையுடன் செயல்பட்டு வருவது நமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. அந்த நாட்டில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் அரசு ஒடுக்க வேண்டும்.

வேலையில்லா திண்டாட்டத்தையும் வறுமையையும் போக்க நாட்டில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வளர்ச்சி பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. ஆனால் இது விவசாயிகள் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த பிரச்சினையை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

 நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படும்.

கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அந்த மாநில மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளில் இருந்து இடதுசாரி கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஊழல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய பிரச்சினையாக உள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக உள்ளது. ஊழலை ஒழித்து இந்திய அரசியலை தூய்மையாக்க தெரிவிக்கப்படும் புதிய யோசனைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும்.

பணக்கார நாடுகள் தங்களிடம் உள்ள அதிகாரங்களை விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை. சர்வதேச நிதி நிறுவனத்தின் புதிய தலைவர் கருத்து ஒற்றுமையுடன் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே ஒருமித்த கருத்துடன் அவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி புதிதாக எதையும் தெரிவித்து விடவில்லை. அவர் கூறிய தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவைதான். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza