Friday, May 27, 2011

அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் : பாஜக!

மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகக் கூறப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், "அப்சல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்? அவருடைய கருணை மனு இன்னும் எவ்வளவு காலங்களுக்கு நிலுவையில் இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

2005 ஆகஸ்டு 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்தது. அன்றிலிருந்து இன்று வரை ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறிய ரவிசங்கர், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது அரசு வரிசையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

2004ஆம் ஆண்டு தனஞ்செய் சாட்டர்ஜி என்ற மரணத் தண்டனை கைதியின் கருணை மனுவை நிராகரித்ததற்குப் பிறகு இப்போதுதான் மேலும் இரண்டு மரணத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1991ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சுமேத் சிங் என்பவர் மீது தாக்குதல் நடத்திய வழக்கிலும், 1993ஆம் ஆண்டு டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.எஸ்.பிட்டா என்பவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய வழக்கிலும் 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தேவிந்தர் பால் சிங் புல்லருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விரு தாக்குதல்களிலும் பலர் கொல்லப்பட்டனர்.

ஹரா காந்த தாஸ் என்பவரை கொன்ற குற்றத்திற்காக மகேந்திர நாத் தாஸூக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza